கன்னியாகுமரி அரசு பஸ்ஸில் மதுபோதையில் இப்படியுமா.. தெறித்து ஓடிய கண்டக்டர்.. வரவேற்ற சிறை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் காக்காவிளையை சேர்ந்த பிஜிலிகர் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளச்சல் பணிமனையில் கண்டக்டராக பணி செய்து வருகிறார். இவர் பணியாற்றும் பேருந்து நேற்று முன்தினம் இரவு குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது போதையில் இருந்த பயணி, கண்டக்டர் பிஜிலிகரை தாக்கி சாலையில் தள்ளிவிட்டுள்ளார். அந்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பேருந்தில் பயணிக்கும் போது அமைதியாக சென்றுவர வேண்டும். மதுபோதையில் பயணிக்க அனுமதி இல்லை.. ஆனால் நிஜத்தில் மது அருந்திவிட்டு தான் சிலர் பயணிக்கிறார்கள். மது அருந்திய அவர்கள், நிதானம் இழந்து தவறாக நடந்து கொள்கிறார்கள். அசிங்கமாக பேசுவது, நடத்துனரிடம் சண்டைக்கு போவது என்று சேட்டை செய்வார்கள். ஒரு சில சமயங்களில் சில போதை ஆசாமிகள் அடித்துவிடுகிறார்கள். அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள காக்காவிளையை சேர்ந்த 44 வயதாகும் பிஜிலிகர் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளச்சல் பணிமனையில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். கடந்த நவம்பர் 15ம் தேதி இரவு 7.20 மணிக்கு குளச்சலில் இருந்து குறும்பனை வழியாக கருங்கல் செல்லும் தடம் எண் 88-பி பேருந்தில் பணியில் இருந்தார். அந்த பேருந்து குளச்சல் அண்ணாசிலை சந்திப்புக்கு வந்தது. பின்னர் மீண்டும் கருங்கல் செல்ல புறப்பட்டது.
அப்போது குறும்பனை இனிகோ நகரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான 56 வயதாகும் ராஜன் என்பவர், பிஜிலிகர் நடத்துனராக பணியாற்றி வரும் அரசு பேருந்தில் ஏறினார். ராஜன்மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜனிடம் கண்டக்டர் பிஜிலிகர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். ஆனால் அவர் டிக்கெட் எடுக்க மறுத்து விட்டாராம். அத்துடன் ராஜன், கண்டக்டரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டாராம்.
இதனிடையே குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு சென்ற போது திடீரென காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளினார். இதில் கண்டக்டர் படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். எனினும் ஆத்திரம் தீராத ராஜன், கீழே விழுந்த கண்டக்டரை மீண்டும் தாக்கினார். இதில் பயந்து போன கண்டக்டர் அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நோக்கி ஓடினார். ஆனாலும் அவரை மீண்டும் தாக்க துரத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு கூடினர்.
இதனை தொடர்ந்து ராஜன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த கண்டக்டர் பிஜிலிகர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அறிந்த பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். கண்டக்டர் பிஜிலிகரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார், ராஜன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்து கீழே தள்ளிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications