கோவை டூ திண்டுக்கல்.. கன்னியாகுமரியில் தற்கொலை செய்த புதுப்பெண் குறித்து திடுக்கிடும் தகவல்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் திருமணம் நடந்த ஒன்றரை மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட புதுப்பெண் காயத்ரி குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் 37 வயதாகும் நடராஜன் என்பவர் கன்னியாகுமரி நகரை ஒட்டிய கொட்டாரத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் தேடி வந்தனர்.

இந்நிலையில் புரோட்டா கடை உரிமையாளரான நடராஜனுக்கும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரிக்கும் (32) கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி உள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். உடடினயாக அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 45 நாளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது உடனடியாக தெரியவில்லை. பிறகு அவர் தற்கொலை செய்த அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.
இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த தொடங்கினர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நடராஜனின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை பார்த்து விட்டு வீட்டுக்கு நடராஜன் தாமதமாக திரும்பிய நிலையில் காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் காயத்ரி காப்பகத்தில் தங்கி இருந்த போது சாமிதோப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தோழியாக பழகி வந்ததன் அடிப்படையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி வந்து தங்கி இருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் தந்தை மூலம் காயத்ரியை, நடராஜனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். திருமணத்தின் போது வரதட்சணை எதுவும் கொடுக்கப்படவில்லை. காயத்ரி தனக்கு பெற்றோர் இல்லை என கூறியிருந்தாரர்
ஆனால் விசாரணையில் காயத்ரிக்கு பெற்றோர் இருப்பது தெரியவந்தது. புதுப்பெண் காயத்ரி படித்த பள்ளிக்கூட சான்றிதழை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், காயத்ரி பெற்றோர் திண்டுக்கல்லில் இருந்த தகவலும் தெரியவந்தது ஆனால் புதுப்பெண்ணின் ஆதார் அட்டையில் கோவை பீளமேடு பகுதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இது போலியான முகவரி எனவும், மேலும் காயத்ரி ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவலை அவர் மறைத்து திருமணம் செய்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
இதற்கிடையே திண்டுக்கல்லில் இருந்து காய்த்ரியின் தாயார் சித்ரா, தம்பி கவுதம் ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். இதனை தொடர்ந்து காயத்ரியின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. பிறகு காய்த்ரி உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் காயத்ரி மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் குடும்பத்தினரை போலீசார் கண்டுபிடித்துள்ளதால் இனி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications