கன்னியாகுமரியில் கொத்தனார் வெளியிட்ட கடைசி வீடியோ.. மனைவியை அதிரடியாக கைது செய்தது போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின் என்ற கொத்தனார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுனிதாவுக்கு 45 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணம் ஆகி 19 வருடங்கள் ஆகிறது. மனைவிக்காக வெளிநாட்டில் இருந்து சம்பாதித்த பணத்தில் வீடு கட்டியிருக்கிறார். ஆனால் மனைவியோ வேறு ஒருவருடன் மாயமானார். இதனால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட நிலையில், அவரது மனைவி சுனிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதல் என்பது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இன்று வரை இருந்து வருகிறது. திருமணத்தை மீறிய உறவை தாங்க முடியாத இணைகள் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். இதேபோல் தவறான உறவால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண், குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சமூகத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு இந்த கள்ளக்காதல் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கன்னியாகுமரியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின் என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). பெஞ்சமின் சுனிதா தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் சம்பாதித்த பணம் மற்றும் கொன்னக்குழி விளையில் இருந்த தனது குடும்ப வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தில் தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இந்தநிலையில் சுனிதாவின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதாம். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த பெஞ்சமின், இதைபற்றி கேட்கவே, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சுனிதாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்தவொரு தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து பெஞ்சமின் அவசர, அவசரமாக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். ஆனால் அவர் வந்து தேடிய பின்னரும் மனைவி சுனிதா மாயமானது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். இதுபற்றி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
இதற்கிடையே கடந்த 28-ந் தேதி பெஞ்சமின் திடீரென விஷம் குடித்து உயிரைவிட்டார். அதே சமயத்தில் சாவதற்கு முன்பு சமூகவலைதளத்தில் உருக்கமான வீடியோவை அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில், தனது மனைவி சுனிதா கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். அந்த வீடியோவில்அவர் கூறுகையில், எஸ்பி அய்யா, 19 வருடங்களாக என் மனைவியை நான் ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் கள்ளக்காதலனுடன் போய் விட்டார். கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். எனது மனைவி உறவினர், வக்கீல் ஒருவரும் என்னை மிரட்டினார்கள். ( என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித்தாங்க..
அதை நான் மேலே இருந்து நிச்சயம் பார்ப்பேன். என்னை கொஞ்சம், கொஞ்சமாக மனைவியின் கள்ளக்காதலன் கொன்றுள்ளான், எஸ்பி அய்யா, அவனை விட்டு விடாதீங்க. வியாகுல மாதா அன்னையாக உங்களை கருதுகிறேன். நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தனது மனைவி சுனிதா, அவருடைய கள்ளக்காதலன், சுனிதாவின் உறவினர் ஒருவர் சேர்ந்து என்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சுனிதாவை நேற்று மணியன்குழி பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications