அண்ணாமலை தலைவரான முதல் நாளே.. கரூரில் பாஜக "சம்பவம்".. காரை நிறுத்தி இறங்கிய கலெக்டர்.. பரபரப்பு
கரூர்: பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட முதல் நாளிலேயே, அவரது சொந்த மாவட்டம் கரூரில் அந்த கட்சியினருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் பெரும் வாக்குவாதம் மற்றும் மோதல் வெடித்துள்ளது.
Recommended Video
இதையடுத்து பாஜகவினரை மொத்தமாக கைது செய்துள்ளது காவல்துறை.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு இருக்கிறார் . இவர் ஒரு வருடம் முன்பாக அந்த கட்சியில் சேர்ந்தவர். கரூர் மாவட்டம் தான் இவரது சொந்த ஊர்.

விதிமுறை மீறல்
அண்ணாமலை அந்த கட்சியில் அடைந்துள்ள திடீர் வளர்ச்சி, கரூர் மாவட்ட பாஜகவினரை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விதிமுறைகளை மீறி இன்று பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

காரை நிறுத்திய கலெக்டர்
பாஜகவினரின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் காரில் சென்ற வழியில் சரமாரியாக பாஜகவினர் பட்டாசு வெடித்துள்ளனர். இதைப்பார்த்த கலெக்டர் அங்கேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினார். அங்கே கூடியிருந்த பாஜகவினரை பார்த்து.. "ஊரடங்கு காலகட்டத்தில் இவ்வாறு ஒன்றாக கூடி பட்டாசு வெடிக்கிறீர்களே.. மாவட்ட நிர்வாகத்திடம் இதுபற்றி அனுமதி பெற்று உள்ளீர்களா" என்று கேள்வி எழுப்ப, மற்ற கட்சியினர் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் அப்போதெல்லாம் நீங்கள் தடுப்பது கிடையாது என்று பாஜகவினர் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளனர்.

குவிந்த போலீஸ்
கலெக்டரை சூழ்ந்துகொண்டு பாஜகவினர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு விரைந்தனர். அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்தது தெரியவந்ததால் பாஜகவினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முதல் நாளே
அனுமதி பெறாமல் அட்ராசிட்டி செய்ததோடு.. மாவட்ட கலெக்டரிடம் பாஜகவினர் வாக்குவாதம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. புது தலைவர் பதவியேற்ற முதல் நாளிலேயே இப்படி ஒரு பஞ்சாயத்தா என்று புலம்புகிறார்கள் சில சீனியர் பாஜக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications