கரூரில் 100 இடங்களா.. செந்தில் பாலாஜி டீம் மீது கலெக்டரிடம் புகார் தந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைக்க அனுமதியின்றி 100 பட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். ஆர்.கே.நகர், ஈரோடு ஃபார்முலா போல கரூரிலும் தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ள பட்டிகளுக்கு எந்தவித அனுமதியும் வாங்குவதில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு மீது புகார் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. இந்த தொகுதியில் இவர் தான் போட்டியிடுவார் என்று தெரிந்த நட்சத்திர தொகுதிகளில் பிரச்சாரம் ஏற்கனவே களைகட்டிவிட்டது. அந்த வகையில் கரூரில் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் பாஸ்கர் இடையே மோதல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அங்கு போட்டி கடுமையாக உள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரூரில் சுமார் 100 இடங்களில் திமுக சார்பில் ஆடு, மாடுகளை அடைப்பது போல மனிதர்களை அடைப்பதற்கு பட்டிகள் தயார் நிலையில் உள்ளது. கரூர் தொகுதியில் 48 இடங்களில் போடப்பட்டுள்ள பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உள்ளோம்.
பொதுமக்களிடம் போட்டோ ஆதார் கார்டு வாங்கி அவர்களை உள்ளே உட்கார வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் அங்கு அவர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட கவனிப்புகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் திமுகவின் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர்.
அனைத்து அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கு மட்டும் தனி சட்டம் உள்ளது குறிப்பாக கரூர் தொகுதிக்கு மட்டும் சிறப்பு சட்டம் உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து பொதுமக்களுக்கு பிரைன் வாஸ் செய்து ஓட்டு வாங்கி வெற்றி பெற நினைக்கின்றனர். ஆர்.கே.நகர், ஈரோடு ஃபார்முலா போல கரூரிலும் தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ள பட்டிகளுக்கு எந்தவித அனுமதியும் வாங்குவதில்லை.
கோவில் இனாம் நிலங்களில் செட் போட்டுள்ளனர். ஆனால், கோவில் இனாம் நிலங்களில் குடியிருக்கும் அப்பாவி பொதுமக்களை விரட்டியடிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications