Karur Case: கரூர் வழக்கில் சூடுபிடித்த சிபிஐ விசாரணை.. கண்காணிக்க நேரில் வந்த அஜஸ் ரஸ்தோகி குழு!
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், திடீரென கரூர் சுற்றுலா மாளிகைக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஏடிஜிபி சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் மூவரும் கரூர் வழக்கை கண்காணித்து ஆலோசனை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியும், நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பின் வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், மின்வாரிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் விஜய்யின் பிரச்சார வாகன வீடியோக்கள் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், மதியழகன், பவன்ராஜ் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அதேபோல் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவின் உத்தரவில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அதன்படி இன்று காலை இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் வந்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வரவேற்றார். ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோருடன் விசாரணை நடந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை தொடர்பாக ஆலோசனை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்று கரூர் விவகாரம் தொடர்பாக யார் வேண்டுமானாலும் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த கோகிலா மற்றும் பழநியம்மாள் ஆகியோரின் பெற்றோர் பெருமாள், செல்வராணி ஆகியோர் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்து புகார் அளித்தனர். அதேபோல் முன்னாள் எம்எல்ஏ தனியரசு விஜய் மீது புகாரளித்தார்.












Click it and Unblock the Notifications