எங்கே விஜயபாஸ்கர்? தீவிரமாக தேடுது போலீஸ்.. நில மோசடி கேஸில் இன்று ஜாமீன் கிடைக்குமா? கரூர் பரபரப்பு
கரூர்: போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தாக்கல் செய்த முன்ஜாமீன் மீதான உத்தரவு இன்று வழங்கப்பட உள்ளது. கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்க உள்ளது.
கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்..

புகார் மனு: அந்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இதையடுத்து, 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. எனினும், இந்த வழக்கில் தன்னுடைய பெயரும் சேர்க்கப்படலாம் என்று கருதி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12-ம் தேதி முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.. ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
நில மோசடி: இதனிடையே, நிலமோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் இன்னொரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்தமனுவில், தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த மனு நேற்றைய தினமே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணையை இன்றைய தினம் அதாவது ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எதிர்பார்ப்பு: ஏற்கனவே முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், இப்போது இடைக்கால முன் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் இன்றைய தினம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தலைமறைவு: முன்னதாக, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீனும் மறுக்கப்பட்டதால் தலைமறைவாகிவிட்டார் எம்.ஆர். விஜயபாஸ்கர்... எனவே, தலைமறைவாக விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரைத் தேடி வருகிறார்கள்.
இதனிடையே, கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.. நிலமோசடி தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ள நிலையில், விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை முதலே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், விஜயபாஸ்கர் விவகாரத்தில் நெருக்கடி கூடியிருக்கிறது.












Click it and Unblock the Notifications