உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்! கபடி போட்டியால் களைகட்டிய கரூர்! கொண்டாட்டத்தை தொடங்கிய செந்தில்பாலாஜி!
கரூர்: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கரூரில் மாபெரும் கபடி போட்டிகளை நடத்தி வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை அழைத்து வந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கபடி போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் தங்கள் மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட தயாராகி விட்டார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் 27ஆம் தேதி 45வது பிறந்தநாள் ஆகும். இதனை கோலாகலமாக கொண்டாடி தீர்க்கத் திட்டமிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்றிரவு கரூரில் மாபெரும் கபடி போட்டிகளை நடத்தி வருகிறார். இந்தப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து கவுரவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
உதயநிதி பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டங்கள், மருத்துவ முகாம்கள் என இன்னும் பல நிகழ்ச்சிகளை கையில் வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இனி வரிசையாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கரூரில் நடத்தவுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலாளர்களும் நவம்பர் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

கோவையிலும் கொண்டாட்டம்
கரூரில் எந்தளவுக்கு உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் இருக்கிறதோ, அதைவிட ஒரு படி மேலாக கோவை மாவட்டத்தில் கொண்டாடவும் கைவசம் நிறைய திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இன்னும் ஒரு வார காலம் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பிசியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகை
அமைச்சர் செந்தில்பாலாஜி நடத்தும் கபடி போட்டியில் பரிசுகளுக்கு பஞ்சமிருக்காது என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே கபடி போட்டியை காண கரூர் சுற்றுவட்டார மக்கள் திரளாக குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications