விஜயிடம் பேசிய போலீசார்.. கேட்டது என்ன? அதன்பின் நடந்த சம்பவம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக, காவல்துறை அதிகாரிகள் விஜய்யின் சென்னை இல்லத்திற்கே நேரடியாகச் சென்று கேள்விகளை எழுப்பலாமா என்பது குறித்து தற்போது தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இது தொடர்பான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இன்று காலை விஜயிடம் போலீசார் பேசி உள்ளனர். அப்போது.. நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பவில்லை. 8.30க்கு முன்பாக நாமக்கல் கூட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

இதனால் கரூர் கூட்டம் கூடுவது தாமதம் ஆகி உள்ளது. இதனால் நெரிசல் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று போலீசார் அவரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய் பிரச்சாரத்தின் போது.. முறையாக ஒத்துழைப்பு நல்கிய போலீஸாருக்கு நன்றி என்று கூறி உள்ளார். ஆனால் அவர் நன்றி கூறிய சில நிமிடங்களில்தான் நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கொத்து கொத்தாக பலியானார்கள். ஒருவேளை விஜய்.. போலீஸ் பேச்சை கேட்டு.. சரியாக கொடுக்கப்பட்ட நேரத்தில் வந்து பேசிவிட்டு சென்று இருந்தால்.. இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்கிறார்கள் போலீஸ் தரப்பினர்.
விஜய் மீது ஆக்சன்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். கரூரில் தமிழக வெற்றிக் கழக விஜய் கூட்டத்தில் மக்கள் பலியான சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடந்து வருகிறார்.
பல்வேறு முக்கிய விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்படலாம் என்கிறார்கள். அதன்படி, உடனடியாக பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் தருவது. காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை தருவது, கூட்டத்தில் நடந்தது தொடர்பாக விசாரணை கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக விசாரணை கமிட்டி வழியாக விஜய் மீது ஆக்சன் எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டோருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications