Karur stampede: A1 தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவு.. செல்போனும் ஸ்விட்ச் ஆஃப்!
கரூர்: தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் விஜய் பிரச்சாரம் முடிந்தபின்னர் அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இணைச் செயலாளர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மதியழகன் தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தலைமறைவானவர்களைக் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்தை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதே சமயம் விஜய் பிரசாரத்துக்கு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மறுத்துள்ளார். வேலுசாமிபுரத்தில் பிரசாரம் நடைபெற்றபோது மின் தடை ஏற்படவில்லை. ஒருங்கிணைப்பாளர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்கள் மற்றும் ஃபோகஸ் லைட் கூட்ட நெரிசலால்தான் அணைந்தது என கரூர் மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications