செயற்கை கால் பொருத்த ஒரு பைசா செலவில்லை! - ஸ்டாலின் ஏற்படுத்தித் தந்த நவீன சிகிச்சை
கிருஷ்ணகிரி: இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை அவயங்கள் தயாரித்துத் தரும் திட்டம் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வில் இனி வசந்தகாலம் வீசுமா? என ஏக்கத்தில் முடங்கிப் போய் இருவர்கள் இங்கு வந்தால் மறுவாழ்வைப் பெறுகிறார்கள். அதற்கான அடையாளம்தான் பசவராஜ்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உற்கமாகப் பொங்கல் பண்டிகைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது பசவராஜ் வாழ்க்கையில் மாபெரும் சோகம் ஒன்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்டமுகிலாலம் என்று ஒரு மலைக்கிராமம் தான் பசவராஜுக்கு சொந்த ஊர். பண்டிகை அன்று மாடுகளை அவர் பராமரித்து வந்தார். அப்போது ஒரு மாடு அவரை முட்டித் தள்ளியதில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. தசை நரம்புகள் பாதிக்கப்படவே அவர் இறுதியாகத் தனது காலையே இழந்தார். அதன்பின் அறுவைச் சிகிச்சை. வீட்டில் முடங்கிக் கிடந்தவரை முழுமையாக மீட்டுக் கொண்டுவந்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பசவராஜ் வாழ்வைச் சோகமாக்கிய பொங்கல்:
இன்று பசவராஜ் புதிய மனிதன். அவரைச் சந்தித்தோம். "போன வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது மாடு எனது காலை மிதித்ததால் உடைந்துவிட்டது. மருத்துவமனைக்குத் தூக்கிப் போனார்கள். முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியை முற்றிலும் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
அதன்பிறகு ஆறுமாதமாக வீட்டிலேயே மூலையில் முடங்கிக் கிடந்தேன். சுத்தமாக வாழ்க்கையே மாறிவிட்டது. நடக்க முடியவில்லை. என் வேலைகளை நானே செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. அப்போதுதான், மாவட்ட ஆட்சியர் மூலமாக உதவியைத் தேடினேன். அவர்கள் என் நிலைமையைப் புரிந்துகொண்டு உதவ முன்வந்தார்கள்.
பிறகு முதல்வர் ஸ்டாலினே எனக்குச் செயற்கை காலை வழங்கினார். அதன்பின் தொடர் சிகிச்சைக்கு உதவினார். ஸ்டாலின் தான் இன்று என் வாழ்க்கையில் ஒளிவீச வைத்துள்ளார். அவரது உதவி இல்லை என்றால் இன்றைக்கு உங்கள் முன்னால் நான் இல்லை" என்கிறார்.
"இவருக்காக 5 லட்சம் வரை கடன்பட்டுவிட்டேன். எப்படியாவது காலை மீட்டு விடலாம் எனப் போராடினேன். ஆனால் கடைசியில் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை. வேலூர் போய் மருத்துவம் பார்த்தோம். தருமபுரி போய் பார்த்தோம். அங்குக் காலை கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும் எனக் கூறியதால் எடுத்தோம்" என்கிறார் பசவராஜ் தந்தை.
மருத்துவர் கங்கா தேவி பேசும்போது, "பொங்கல் பண்டிகையின்போது மாடு பசவராஜ் காலை மிதித்துவிட்டது. அந்தக் காயம் அப்படியே சதைப் பகுதியைப் பாதித்து இரத்தவோட்டம் முழுமையாகப் பாதித்துவிட்டது.
எனவே மருத்துவர்கள் காலையே எடுத்துவிட்டார்கள். அவரது காலை நீக்கிய பிறகு செயற்கை கால் பொருத்துவதற்காக அரசு உதவிவேண்டி எங்கள் மருத்துவரை வந்து சந்தித்தார். அப்போதுதான் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தார்.
அதன் பிறகு 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ் சாமனப்பள்ளியில் நடைபெற்ற திட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் அவருக்குச் செயற்கைக் கால் வழங்கப்பட்டது. பயனாளியைச் சோதித்துப் பார்த்தபோது, அவரது தசைப் பகுதிகள் மிக மோசமாக இருந்தன. மேலும் அதற்காக பிசியோதெரஃபி சிகிச்சையும் அளித்தோம்.
திடீரென்று ஒரு காலை அவர் இழந்ததால் தடுமாற்றம் இல்லாமல் நிற்க முடியவில்லை. ஆகவே அவரை சமநிலைப் படுத்துவதற்காகக் கொஞ்ச நாட்கள் உடற்பயிற்சிகளை வழங்கினோம். அவர் மூன்று வாரங்களில் சீரான நிலைக்குத் திரும்பினார். அதன் பிறகு செயற்கைக் கால் மூலம் நடக்கப் பழக்கப்படுத்தினோம். இப்போது மிகச் சிறப்பாக உள்ளார்" என்கிறார்.
மருத்துவர் கங்கா தேவி தனது 'மக்களைத் தேடி மருத்துவம்' குழுவினருடன் வந்து இந்த மலைக்கிராமத்திற்குச் சிகிச்சை அளிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக இந்தப் பயனாளியை இவர்தான் பரிசோதித்து உதவிகளைச் செய்து வருகிறார். பசவராஜ் படிப்படியாக மீண்டும் நடக்கத் தொடங்கியதற்கு இந்த மக்களைத் தேடி மருத்துவம் குழுதான் முழுக் காரணம் என்று தைரியமாகச் சொல்லலாம்.

அரசின் மக்களைத் தேடி மருத்துவம் யாருக்கானது?:
இக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் மறை தென்றல், "இந்த மலைக்கிராமத்தில் பல்வேறு நபர்கள் மக்களைத் தேடி மருத்துவக் குழுவால் பயன்பெற்றுள்ளனர். அதில், ஒருவர்தான் பசவராஜ். பொதுவாக ஒருவர் பிறவியிலேயே பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இடையில் ஏற்பட்ட விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அவர்களை மீட்டு அன்றாட வாழ்க்கையில் யார் உதவியும் இல்லாமல் சொந்தக்காலில் நடைபோட வைப்பதே எங்களின் வேலை.
அரசின் இந்தத் திட்டத்தில் சிறுவயது முதல் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் பலன்பெறலாம். அனைவருக்கும் பொதுவான திட்டம் இது. ஆனால் நோயாளியின் நிலையை எங்களது குழு நேரடியாக வந்து ஆய்வு செய்யும். அவருக்குத் தேவை என்ன என்பதை ஆராயும். அதற்குத் தக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் அவரவர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ அலுவலரைத் தொடர்பு கொண்டால் போதும். அவர்களிடம் நேரடியாகத் தேவைகளை முன்வைக்கலாம். மாவட்ட மருத்துவ அலுவலர் தனக்குக் கீழாக உள்ள நடமாடும் மருத்துவக் குழுவை அனுப்பி வைப்பார். அந்தக் குழு நோயாளி நேரடியாக மருத்துவமனைக்கு வரமுடிவில்லை என்பதை உறுதி செய்யும். அதன்பின் எங்கள் குழுவே நேரடியாக நோயாளியின் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்கும்" என்கிறார்.
இந்தத் திட்டத்தில் ஒரு கர்ப்பிணிகூட பயன்பெற முடியும். அவர் கர்ப்பிணி ஆக உறுதியானதற்குப் பின் மாதாமாதம் தனது மருத்துவ சோதனைக்காக அலைய வேண்டாம். அவருக்குத் தேவையான மருத்துவ உதவியை நேரடியாக இந்த மக்களைத் தேடி மருத்துவக் குழுவிடம் இருந்து வீட்டிலிருந்தே பெறமுடியும். ஆகவே பயனாளி யாராக இருந்தாலும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறது இந்த மருத்துவக் குழு.

2 லட்ச ரூபாய் செயற்கை காலை இலவசமாகத் தந்த ஸ்டாலின்:
இந்தச் செயற்கை காலின் விலை குறைந்தது 2 லட்ச ரூபாய் வரை ஆகும். ஒரு மலைக்கிராமத்தில் கூலி வேலை செய்து வாழ்ந்துவரும் பசவராஜ் போன்ற ஒருவரால் இவ்வளவு தொகையைச் செலவு செய்து வாங்குவது என்பது முடியாத காரியம். அந்தவகையில் அரசு இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்து செயற்கைக் கால் வாங்கி தந்துள்ளது.
மேலும் அவருக்குத் தேவையான மருத்துவ உடற் சிகிச்சையும் தொடர்ந்து அளித்து அவரை ஊக்குவித்து வருகிறது. இந்த மாதிரியான ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் யோசித்து செயல்வடிவத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அந்த வகையில் பசவராஜுக்கு இது ஒரு மாபெரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய திட்டம்.
இந்தச் செயற்கை கால் ஏனோதானோ என்று வழங்கப்படுவதில்லை. இதற்கான மையம் பெங்களூருவில் உள்ளது. அங்கே பசவராஜை அழைத்துச் சென்று அங்கே அவரது உடல் எடை மற்றும் கால் அளவுக்கு ஏற்றபடி செய்து அதன் பின்பே வழங்கப்படுகிறது. இதற்காக 4 முறைக்குமேல் மருத்துவக் குழு பசவராஜை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இத்தனை வேலைகளும் முடிந்த பிறகே சாமனப்பள்ளியில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவக் குழு திட்டத்தின் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளி பசவராஜை நேரடியாக அழைத்து இந்தச் செயற்கை காலை வழங்கி இருக்கிறார்.

அறியாமையில் 5 லட்சம் வரை செலவு செய்த பசவராஜ்:
பலரும் இதைப் போன்ற திட்டங்களில் வழங்கப்படும் பொருட்கள் அனைவருக்கும் பொதுவானவை என்ற மனநிலையில் பார்க்கிறார்கள்.
ஆனால், அப்படி அல்ல. ஒருவரின் தேவை மற்றும் உடல் அமைப்பு என அனைத்தையும் மருத்துவரீதியாக மருத்துவக் குழு உறுதி செய்த பிறகே பயனாளிக்கு உரிய உபகரணம் போய்ச் சேருகிறது என்பதே உண்மை நிலை.
பசவராஜ் முன்பே இந்தத் திட்டத்தைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்துள்ளார். ஆகவேதான் தனக்கு அடிப்பட்ட உடன் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்திருக்கிறார். அந்த மருத்துவர்கள் தந்த அறிவுரைப்படி 5 லட்சம் வரை செலவழித்து காலையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இருக்கிறார். இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை இது பெரிய தொகை.
இந்தளவு செலவு செய்யாமல், நேரடியாக இவர் மக்களைத் தேடி மருத்துவக் குழுவை ஆரம்பக் கட்டத்திலேயே அணுகி இருந்தால், இந்தச் செலவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் அரசு மருத்துவக் குழுவைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர்.
ஆகவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்த இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அந்தளவுக்கு அற்புதமான திட்டம் என்கிறார்.

'கண்ணொளி காப்போம் திட்டம்' பற்றித் தெரியுமா?
இது தவிரப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு குழு இந்த மலைக்கிராமத்தில் வேலை செய்து வருகிறது. அதில் ஒருவரான மலர் விழி பேசும்போது, "தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இரண்டு திட்டங்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கொண்டுவந்த 'கண்ணொளி காப்போம் திட்டம்'.
மற்றொன்று, 'வருமுன் காப்போம் திட்டம்'. இதில் 'கண்ணொளி காப்போம் திட்டம்' மூலம் ஒவ்வொரு மாதமும் மாவட்ட முழுவதும் உள்ள ஒரு பள்ளியைத் தேர்வு செய்து அங்குள்ள பள்ளிக் குழந்தைகளின் கண்பார்வை பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தச் சோதனையில் பிள்ளைகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனே மருத்துவரை பரிந்துரை செய்கிறோம். அரசு மருத்துவமனையில் அதற்கான இலவச சிகிச்சையையும் அளிக்கிறோம். இலவச கண்ணாடியும் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பெட்டமுகிலாலாம் மலைக்கிராமத்தில் முகாம் அமைத்து பள்ளிக் குழந்தைகளைப் பரிசோதித்து வருகிறோம்" என்கிறார்.

ஸ்டாலின் ரூ 28.40 கோடி செலவில் தந்த மருத்துவமனை:
30 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம். அது இந்த மக்களுக்காக 24 மணிநேரமும் திறந்துள்ளது. 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ஒரு துணை சுகாதார நிலையத்தை அமைத்துள்ளது அரசு. இந்த எல்லைக்குள் வரமுடியாத, அதாவது சரியான சாலைவசதிகள் இல்லாத இடங்களுக்கு அரசே நேரடியாக மருத்துவக் குழுவை அனுப்பி சிகிச்சை அளித்து வருகிறது.
இவற்றைத் தாண்டிப் பழங்குடி மக்களுக்காகவே மலைக்கிராமத்திற்குச் சென்று சிகிச்சை அளிக்க ஒரு நடமாடும் மருத்துவக் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
செயற்கை அவயங்கள் சார்ந்து மட்டுமே இயங்கி வரும் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜெயக்குமார் பேசுகையில், "1960இல் தென் இந்தியாவிலேயே முதன்முதலாகச் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் ஒரு நிலையம் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையத்திற்காக மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் 28.40 கோடி பட்ஜெட்டில் ஒரு மையத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே அதிக படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையம் தொடங்கியபோது வழங்கப்பட்ட செயற்கை கால்களைவிட இப்போது வழங்கப்படும் செயற்கைக் கால் முற்றிலும் நவீனமயமானவை. எடைக் குறைவானவை. பயன்படுத்துவதற்கு மிக எளிதானவை. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலரும் இதில் பயன்பெற்று வருகின்றனர்.

முழு செலவையும் இலவசமாக மாற்றிய ஸ்டாலின்:
முன்பு செயற்கை அவயங்கள் பொருத்த ஒரு சிறுதொகை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய கட்டட தொடக்கவிழாவிற்கு வருகை தந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தச் சின்னஞ்சிறு தொகையை இனி வசூலிக்கக் கூடாது என உத்தரவு போட்டுவிட்டார். ஆகவே, இப்போது முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது" என்கிறார்.
இதனால் வெளிச்சந்தையில் 3 முதல் 5 லட்சம் வரை செலவு செய்து வாங்க வேண்டிய செயற்கை அவயங்கள் இப்போது விலையில்லாமல் பயனாளிகளுக்குக் கிடைத்து வருகின்றது.

இந்த மருத்துவமனைச் சிறப்பு என்ன தெரியுமா?:
இம்மருத்துவமனையின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், இங்கே வரும் நோயாளிகள் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அப்படித் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையாக பிசியோதெரஃபி மற்றும் உடற்பயிற்சி எனப் பலவற்றையும் கற்றுத் தருகிறார்கள்.
அந்தளவில் ஒரு முழுமையான நிலை கிடைத்த பின்பே நோயாளி வீடு திரும்பலாம். வெறும் செயற்கை அவயங்களைப் பெற்றுக் கொண்டு சென்றால் அதன்பின் பல இன்னல் வரக் கூடும். அதை உணர்ந்தே இந்த மருத்துவமனை பல கோணங்களில் யோசித்துச் சிறப்பான செயலை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications