கிருஷ்ணகிரி கவிசென்றாய பெருமாள் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு! இந்து அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு, அதை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எர்ரஹள்ளி, காவேரிப்பட்டினம் கிராமங்களில் பல ஏக்கர் பரப்பில் உள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான இந்த விவசாய நிலங்களை பலர் ஆக்கிரமித்திருப்பதால், கவி சென்றாய பெருமாள் கோவிலுக்கு வருவாய் கிடைப்பதில்லை என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கிருஷ்ணகிரி கவி சென்றாய பெருமாள் கோவில் நிலங்களைப் பாதுகாத்து அதன் மூலம் கோவிலுக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை தடுக்கும் நபர்களிடம் இருந்து கோவில் சொத்துகளை மீட்டு பாதுகாக்க வேண்டும் என இந்து அறநிலைய துறைக்கு கடந்த 2014-ம் ஆண்டு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நிலங்கள் அபகரிப்பு, கோவில் சொத்துக்கள் திருட்டு, கோவில் நிலங்களில் இருந்து கனிம வள திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் இருந்து கவி சென்றாய பெருமாள் கோவிலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இதே நிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கோவில்களில் இருப்பதாகவும் அவர் மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபானி முன் விசாரணைக்கு வந்தது, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications