சித்தப்பா சீமான்.. அரிய வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்! உயிரை கொடுத்து.. வீரப்பன் மகள் உருக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் களம் காண்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வித்யா வீரப்பன், "சித்தப்பா சீமான் அரிய வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். என் உயிரை கொடுத்து பணி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த லோக்சபா தேர்தலில் தனித்து களம் காண்கிறது. திமுக, அதிமுக மற்றும் பாஜகவுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியும் கோதாவில் இறங்கியுள்ளது. தேர்தலுக்கு ரெடியாகியுள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி நேற்று முன்தினம் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்களை சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இதில், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா வீரப்பனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். பாஜகவில் மாநில ஓபிசி அணியின் துணை தலைவராக இருந்த இவர் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வித்யா வீரப்பன் கூறியதாவது:- என் தந்தையுடைய நோக்கத்தையும் அவருடைய சுதந்திரமான வாழ்க்கையை ஒரு அடித்தட்டு மக்களுக்கு அளித்துவிட்டு போக வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதனையே ஒரு குறிக்கோளாக வைத்து எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததில் தான் முடிவு இப்படி ஆனது.
அப்படி இருந்தாலும் அவரது உயிரான என்னை இங்கே அவரது செயல்களை செயல்படுத்துவதற்காக விட்டுவிட்டு போயிருக்கிறார். அதனை சப்போர்ட் செய்து அந்த கொள்கைகளின் படி நடந்து கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, அந்த கொள்கைகளின் படி செயல்படும் எனது சித்தப்பா சீமான், சித்தி கயல்விழி, எனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கினர். எனக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த சீமானுக்கு நன்றி.
எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு என்னுடைய அப்பாவின் ஆசிர்வாதம் தான். இந்த கிருஷ்ணகிரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த என் உயிரை கொடுத்து பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நான் உங்களுக்கு சேவை செய்ய முடியும். என் அப்பாவின் கொள்கையை நான் நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் என இந்த லோக்சபா தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications