“விஜய் கால் கிடைக்குமா? விழுந்துவிடலாமா என ஏங்குகிறார்கள்!” பழனிசாமியை சாடிய புகழேந்தி
கிருஷ்ணகிரி: "அதிமுகவில் ஒற்றுமைக்காக அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை எனில், தொண்டர்கள் மத்தியில் புரட்சி வெடிக்கும். பழனிசாமி தூக்கி எறியப்படுவார். விஜய்யின் கால் கிடைக்குமா? அதில் விழுந்துவிடலாமா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்" என பெங்களூர் புகழேந்தி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "55 ஆவது ஆண்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வருமா? என்கின்ற கேள்விக்குறி எழுப்பப்பட்டுள்ளது. இயக்கம் தொய்வான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சியை நம்மிடம் ஒப்படைத்து சென்றவர்களுக்கு, துரோகம் செய்து பழனிசாமி எல்லோரையும் சேர விட மாட்டேன் என்று சொல்லி பிடிவாதம் பிடித்து, இயக்கத்தை உடைத்து, 4-5 குழுக்களாக இயக்கம் பிரிந்திருப்பதை பார்க்க முடிகிறது.

அவர் ஒற்றுமைக்கு வரவில்லை என்று சொன்னால், தொண்டர்களிடத்திலே மாபெரும் புரட்சி வெடிக்கும். அதைத்தான் இன்று இரவு நான் உங்களிடத்தில் சொல்ல வந்தேன். இனி வேடிக்கை பார்க்க முடியாது. பல மாறுதல்கள் ஏற்படும். இது தொடர்ந்தால் என்னை பொறுத்தவரை பழனிசாமி இந்த தலைமையில் நீடிக்க முடியாது. நான் உண்மையை சொல்கிறேன். தேர்தலில் பழனிசாமி தலைமையில் போட்டியிடுவதற்கு கூட யாரும் வரமாட்டார்கள்.
கட்சிக்குள் இருப்பவர்கள் போவதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டத்தில் பறக்கும் மாற்றுக் கட்சி கொடியை பெருமையாக பேசுவதும், பிள்ளையார் சுழி போட்டு விட்டாகிவிட்டது என்று கூறுவதும், வேடிக்கையாக இருக்கிறது. அப்படி எனில் நம்முடைய தலைவர் கொடுத்த கொடி என்ன ஆயிற்று? இதை பழனிசாமி மறந்துவிட்டார். ஆகவே இந்த இயக்கம் ஒற்றுமை இல்லாமல் போகுமே ஆனால், அடுத்த ஆண்டில் இந்த நாளில் முழுவதுமாக அழிந்து போய்விடும். அப்படியான சூழலைத்தான் பழனிசாமி உருவாக்கியிருக்கிறார்.
ஆனால், நாங்கள் தொண்டர்கள் விடமாட்டோம். ஒரு புரட்சி வெடிக்கும். பழனிசாமி தூக்கி எறியப்படுவார். அவருக்கு பிறகு இந்த கட்சியை எப்படி நடத்தி போக வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். ஒற்றுமை வேண்டும் என்று பலரும் பேசுகிறார்கள். அதற்கான முயற்சியில் அனைவரும் விலகி நிற்கிறார்கள். எல்லோரும் பிஜேபிக்கு அடிமையாகி பயந்து கொண்டிருக்கிறார்கள். எங்கிருந்தாவது அழைப்பு வருமா, எங்காவது போய் விட முடியாதா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் கூட்டத்திலும் இந்து முன்னணி கூட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர்.
விஜய் கால் கிடைக்குமா! என்று அலைகின்ற நிலையில் ஏற்படுத்தி விட்டார் பழனிசாமி. விஜய் வெளியில் வரமாட்டாரா? கால் கிடைக்குமா! விழுந்துவிட மாட்டோமா? என்கிற மோசமான ஒரு நிலையை இயக்கத்திற்கு உருவாக்கி கொடுத்து வேடிக்கை பார்க்கின்ற ஒரு மனிதர் பழனிசாமி. அவர் திருந்த வேண்டும்.
இயக்கம் ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு. அதுவே மறைந்த தலைவர்களுக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி எப்பொழுது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று பேசுகிறார்கள். எனக்கும் அவருக்கும் என்ன சொத்து தகராறா? அதெல்லாம் இல்லை. இயக்கத்திற்காக தான் பேசுகிறேன். காலம் இன்னும் இருக்கிறது. கடந்து போய்விடவில்லை. பழனிசாமிக்கு புத்தி வந்தால் மாற்றங்கள் நடக்கும். வரவில்லை என்றாலும் மாற்றங்கள் நடக்கும். ஆனால், அவர் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்.
கட்சியில் களை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஒருவேளை அவர் பிஜேபியைதான் அந்த மாதிரி சொல்கிறாரோ என்னவோ! விஜய் கூட்டணிக்குள் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த இயக்கத்தில் கலை எடுப்பதற்கு என்று எதுவும் இல்லை. இயக்கத்திற்காக ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி உழைத்த தொண்டர்கள்தான் இருக்கிறார்கள். களைகள் எல்லாம் இவர் கொண்டு வந்ததுதான்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications