தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
சென்னை: அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் விராலிமலை ஆகிய 6 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் விராலிமலை தவிர்த்து காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழக அரசியல் சட்டபைத் தேர்தலுக்குப் பின் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையில் காலியாக இருக்கும் தொகுதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

தவெக தலைவரும் முதல்வருமான சி.ஜோசப் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை மே 10 அன்று ராஜினாமா செய்தார். அதிமுகவின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்கள் அனைவருமே பதவியை ராஜினாமா செய்த கையோடு நேரடியாக தவெகவில் இணைந்தனர். இந்த பட்டியலில் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கரும் இணைந்துள்ளார். இவரும் தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜயபாஸ்கர் பிரதிநிதித்துவப்படுத்திய விராலிமலை தொகுதி தற்போது தான் காலியாக அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் அதைத் தவிர்த்து ஏற்கனவே காலியாக இருந்த எஞ்சிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சபாநாயகர் விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட பின், விராலிமலை தொகுதிக்கும் சேர்த்தே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி, ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த 5 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விராலிமலை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் சேர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications