மகாராணி மறைவு.. கையில் பேனாவுடன் சுற்றும் பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்.. பின்னணியில் முக்கிய காரணம்
லண்டன்: பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்த நிலையில் புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவர் தற்போது கையில் பேனாவுடன் சுற்றி வருவதோடு, ஆவணங்களில் தனது பேனாவை பயன்டுத்தி மட்டுமே கையெழுத்திட்டு வருகிறார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார்.
வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

மகாராணி எலிசபெத் மறைவு
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக கடந்த 8ம் தேதி இரவில் மகாராணி 2ம் எலிசபெத் காலமானார். தனது 96வது வயதில் மகாராணி 2ம் எலிசபெத் காலமாகி உள்ளார். இவரது செப்டம்பர் 19ம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதிய மன்னராகும் சார்லஸ்
இதற்கிடையே தான் மகாராணி 2ம் எலிசபெத் மறைவால் பிரிட்டனின் புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் மன்னராக ஏற்கனவே 2 பேர் சார்லஸ் என்ற பெயரில் இருந்ததால் இவர் 3ம் சார்லஸ் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். விரைவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அவர் தனது கையில் பேனா வைத்து கொண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சொந்த பேனாவை பயன்படுத்தி
அந்த வீடியோவில், சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் வேல்ஸில் உள்ள லாண்டாஃப் கதீட்ரலில் பார்வையாளர் கையேட்டில்கையெழுத்திட இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். இந்த வேளையில் கையெழுத்திடுவதற்காக அங்கிருந்த ஒருவர் பேனாவை எடுத்து சார்லஸிடம் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அதனை பெறாத சார்லஸ் தான் வைத்திருந்த பேனாவை எடுத்து ஆவணத்தில் கையெழுத்திடுகிறார். அதன்பிறகு அந்த பேனா அவரது மனைவியிடம் வழங்க அவரும் கையெழுத்திடுகிறார்.

காரணம் என்ன?
பொதுவாக பிரிட்டனின் அரச குடும்பத்தினரிடம் கையெழுத்துகள் வாங்கும்போது அதற்கான ஆவணங்கள், பேனாக்களை ஊழியர்கள் வழங்குவார்கள். இந்நிலையில் தான் ஊழியர் வழங்கிய பேனாவை சார்லஸ் வாங்க மறுத்து சொந்த பேனாவை பயன்படுத்தி உள்ளார். இதன் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் உள்ளது. பிரிட்டன் மன்னராக சார்லஸை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு தான் இந்த மாற்றத்துக்கு காரணமாம்.

மை கசிந்த பேனாவால் மாறிய மனம்
அதாவது பிரிட்டன் மன்னராக சார்லஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார். வடக்கு அயர்லாந்தில் நடந்த அரச விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து சார்லஸ் ஆவணத்தில் கையெழுத்திட்டார். அப்போது சார்லஸ் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவில் இருந்து மை கசியத்தொடங்கியது. இதனால் அவரது கையில் பேனா மை பரவியது. இதனால் விரக்தி அடைந்த அவர், ‛‛கடவுளே நான் இதை வெறுக்கிறேன். இந்த பேனாவை வெறுக்கிறேன்'' எனக்கூறினார். மேலும் அவரது மனைவியும் இன்னொரு பேனாவை பயன்படுத்தி ஆவணங்களில் கையெழுத்திட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் சார்லஸ் பேனாவை கையுடன் எடுத்து செல்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications