70 ஆண்டுக்கு பின் கோலாகலம்.. பிரிட்டன் மன்னராக இன்று முடிசூட்டும் 3ம் சார்லஸ்.. லண்டனில் பிரமாண்டம்
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த 2ம் எலிசபெத் கடந்த ஆண்டு காலமானார். இதையடுத்து பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மகன் 3ம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடிசூட்டி கொள்கிறார். இதனால் லண்டன் விழாக்கோலம் பூண்ட நிலையில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முடிசூட்டும் விழா தொடங்கியது.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் கடந்த ஆண்டு மறைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 96.

இதையடுத்து ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் உடனடியாக அவரது முடிசூட்டும் விழா நடைபெறவில்லை. இதையடுத்து மே மாதம் 7 ம் தேதி (அதாவது இன்று) பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது.
இந்த விழா மிகவும் கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டது. உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் முடிசூட்டி கொள்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முடிசூட்டு விழாவானது பிரிட்டனின் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) துவங்கியது. விழாவுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை மன்னர் சார்லசும், அவரது மனைவியும் ராணி கமிலாவும் சாரட் வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி அவர் மன்னராக முடிசூட உள்ளார்.

அதாவது 700 ஆண்டு கால பழமை வாய்ந்த இருக்கையின் பின்னால் நின்று கொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப் பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிடுவார். அதன்பிறகு அவர் உறுதிமொழி எடுத்து மன்னர் இருக்கையில் அமரவைக்கப்பட்டு மன்னர் உடையணிவார். இதேபோல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்பட்டு பிரிட்டன் ராணியாக ஏற்கப்படுவார்.
இந்த விழாவில் இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார். இதேபோல் அமெரிக்கா அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் உள்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications