மந்தநிலை.. லிஸ் ட்ரசுக்கு மாற்றாக பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்?செக் வைக்கும் மூவர்! பரபர பின்னணி
லண்டன்: பொருளாதார நெருக்கடியால் பிரிட்டன் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் விரைவில் பதவியை இழக்கலாம் என கூறப்படுகிறது. பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ‛செக்' வைக்கும் வகையில் போரிஸ் ஜான்சன் உள்பட 3 பேரின் பெயர்களும் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் பலர் போட்டியிட்டனர்.

பிரதமராக லிஸ் ட்ரஸ்
பிரதமருக்கான இறுதி போட்டியில் அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இருந்தனர். பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. செப்டம்பர் 5ல் முடிவுகள் வெளியாகின. இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். ரிஷி சுனக் தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரிட்டனின் 3வது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார். 6வது வாரமாக பிரிட்டன் பிரதமராக செயல்பட்டு வருகிறார். இவர் 2025 வரை பதவியில் இருக்க முடியும்.

அதிகரித்த பொருளாதார பிரச்சனை
இந்நிலையில் தான் தற்போது பிரிட்டன் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் மேற்கொண்ட நடவடிக்கையை அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலம் பணக்காரர்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையை என்பது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகவும் அதிகமாக பாதித்துள்ளது. இதில் ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில் திட்டம் இல்லாததால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான உள்ளூர் கரண்சி பவுண்டின் விலை வீழ்ச்சி அடைந்ததோடு, கடன் விகிதங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதில் இருந்து பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லிஸ் ட்ரஸ் ராஜினாமா வாய்ப்பு
இதற்கிடையே தான் பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸை நீக்க கன்சர்வேட்டிவ் கட்சியில் ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரிட்டன் ஊடகங்கள் செய்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் பொருளாதார நெருக்கடியை சிறப்பாக கையாண்ட நிலையில் தான் தற்போதைய சூழலில் அவரை பிரதமராக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பிக்கள் இன்னும் சில நாட்களில் பகிரங்கமாக லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டியில் ரிஷி சுனக் உள்பட 4 பேர்
ஒருவேளை லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் அவருக்கு பிறகு பிரதமராக இந்திய வம்சாவளியின் ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் இவரது சேர்ந்து 3 பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சமீபத்தில் பதவியை இழந்த போரிஸ் ஜான்சனும் ஒருவர். இத்தகைய சூழலில் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாக கூறப்படும் 4 நபர்களின் விபரங்கள் வருமாறு:

இந்திய வம்சாவளி ரிஷி சுனக்
கன்சர்வேட்டிவ் கட்சியில் தற்போது பிரதமர் லிஸ் ட்ரஸ் மீது அதிருப்தியில் உள்ள மூத்த எம்பிக்கள் பலரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த பிரதமராக்க ஆதரவு கோருவதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்திய பிரதமர் தேர்தலில் போட்டியிட்டாலும் கூட அவரது பொருளாதார அறிவு காரணமாக ரிஷி சுனக்கை பலரும் விரும்புகின்றனர். மேலும் பிரதமர் தேர்தலின்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிதியில்லாத வரி குறைப்பான 30 பில்லியன் பவுண்ட் திட்டத்தை ரிஷி சுனக் விமர்சித்தார். அப்போது, ‛‛இது பெரும் துயரத்துக்கு வழிவகுக்கும். இது பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என கவலை கொள்கிறேன். இது மோசமான திட்டம்'' என விமர்சனம் செய்தார். தற்போது அவர் கூறியது போல் அந்த திட்டத்தால் பிரிட்டன் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது.

வேகமாக வளர்ந்த ரிஷி சுனக்
ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பைசேர்ந்தவர்கள். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் உஷா. ரிஷி சுனக்கின் மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் கர்நாடகத்தை சேர்ந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள். ரிஷி சுனக், அக்சதா மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் படித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். பிரிட்டன் பிரஜையாக உள்ள ரிஷி சுனக் கடந்த 2015ல் முதல் முதலாக எம்பியானார். யார்க்சயரில் உள்ள ரிச்மண்டில் இருந்து எம்பியாக தேர்வ செய்யப்ட்டார். இவர் குறுகிய காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியில் வேகமாக வளர்ந்தார். மேலும் போரிஸ் ஜான்சன் பதவியை இழப்பதற்கு ரிஷி சுனக்கின் ஆதரவாளர்கள் முன்னிலையில் இருந்தனர். மேலும் 2020 கொரோனா பரவல் சமயத்தில் நிதி அமைச்சராக அவரது பொருளாதார திட்டங்கள் மக்கள் மத்தியில் அவரை பிரபலமடைய செய்தது.

போரிஸ் ஜான்சன்
2019ல் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றிக்கு பிறகு பிரதமரானார். இவர் ஊழல், முறைகேடு புகாரால் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது அவரது இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மது விருந்து நடத்தியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இது அவரது பெயரை பிரிட்டன் மக்களிடம் இன்னும் மோசமாக்கியது. அதோடு போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களான ரிஷி சுனக் உள்பட பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து வேறு வழியின்றி போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த தேர்தலில் தான் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். முன்னதாக போரிஸ் ஜான்சன் தனது இறுதி உரையில், ‛‛நான் ஜனநாயக முறைப்படி நடந்தேன். கொரோனா காலத்தில் சிறப்பாக நாட்டை காப்பாற்றினேன். பிற நாடுகளுடன் சுமூக உறவுகளை கொண்டிருந்தோம். வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடத்தியதை நினைத்து பெருமை கொள்கிறேன்'' என்றார். இந்நிலையில் தான் போரிஸ் ஜான்சனும் மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதாக பிரிட்டன் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பென்னி மோர்டான்ட்
ஹவுஸ் ஆப் காமன்ஸ் தலைவர் பென்னி மோர்டான்ட் மற்றொரு பிரதமர் வேட்பாளராக உள்ளார். இவர் சமீபத்திய பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்கிற்கு பிறகு அதிகமானவர்கள் பென்னி மோர்டான்ட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். 49 வயது நிரம்பிய பென்னி மோர்டான்ட் பிரிட்டன் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 85 நாட்கள் மட்டுமே அந்த பதவியை வகித்தார். குறுகிய கால பதவிக்காலத்தில் கூட முக்கிய கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஊதிய உயர்வை அமல்படுத்தி அசத்தினார். மேலும் பாதுகாப்பு படை அமைச்சராகவும், சர்வதேச வளர்ச்சி பிரிவு செயலாளராகவும் பணியாற்றி அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பென் வாலஸ்
பிரிட்டன் பாதுகாப்பு துறை செயலாளர் இருப்பவர் பென் வாலஸ். இவர் போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோரின் தலைமையில் முக்கிய பதவி வகித்தாலும் கூட ஊழலுக்கு அப்பாற்பட்டு உள்ளார். போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக இன்னொருவரை பிரதமராக்கலாம் என்ற கருத்து எழுந்தபோது முதல் பெயராக பென் வாலஸின் பெயர் தான் இருந்தது. இருப்பினும் ஒருமனதாக தேர்வு செய்யப்படும் முறை இல்லாததால் பென் வாலஸின் பிரதமர் கனவு தகர்ந்தது. மேலும் ஊழல் புகாரை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வர்களிலம் இவரும் ஒருவர் ஆவார். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறி ராஜினாமா செய்தார். தற்போது இவரது பெயரும் பிரிட்டன் பிரதமர் பதவியில் அடிப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications