கோத்தபாய , ராஜபக்சேக்களுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட்- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
லண்டன்: இலங்கையைவிட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மற்றும் கூட்டாளிகளை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
Recommended Video
இலங்கையின் பொருளாதாரத்தை நாசமாக்கிய கோத்தபாய ராஜபக்சே, அந்நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது மாலத்தீவில் இருக்கும் கோத்தபாய, சிங்கப்பூருக்கு தப்பிவிட்டார். சிங்கப்பூர் சென்றடைந்ததும் தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பார் என இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று தெரிவித்திருந்தார். கோத்தபாயவின் ராஜினாமா கடிதத்துக்காக ஒட்டுமொத்த இலங்கையும் காத்திருக்கிறது.

அதேநேரத்தில் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்யாத காரணத்தால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டாலும் இலங்கையில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமும் தொடருகிறது. ரணில் விக்கிரமசிங்கே முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தல்.
இலங்கையில் ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனையடுத்து நாடாளுமன்றத்தையும் போராட்டக் குழுவினர் கைப்பற்ற முயற்சித்தனர். இதனை நேற்று ராணுவம் மிக கடுமையாக ஒடுக்கியது. இந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை பிரச்சனை குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. இதில் Liberal Democrats தலைவர் Ed Davey பேசுகையில், ராஜபக்சே சகோதரர்களின் ஊழல்களால்தான் இலங்கை இப்படி ஒரு மோசமான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ராஜபக்சே சகோதரர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் தமிழர் உள்ளிட்ட அனைத்து மக்களினது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ராஜபக்சேக்களுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
Sam Tarry பேசுகையில், இலங்கையில் அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களினது சுயநிர்ணய உரிமையை மதிக்க வேண்டும் என்றார். Barry Gardiner எம்.பி பேசிய போது தமிழர்களின் உரிமை தொடர்பாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications