24 மணி நேரத்திற்கு குட்பை.. திடீரென மெதுவாக சுற்றும் பூமி.. மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
லண்டன்: இந்தப் பூமியில் இப்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக இருக்கும் சூழலில், அது வரும் காலத்தில் மாறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது இப்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக இருக்கும் நிலையில், அது 25 மணி நேரமாக மாறுமாம். ஏன் இந்த திடீர் மாற்றம்.. இதற்கு என்ன காரணம்.. இதனால் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தப் பூமி தொடர்ச்சியாக ஏகப்பட்ட மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. எதுவுமே நிரந்தரம் இல்லை எனச் சொல்லும் அளவுக்குப் பூமியில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது. இப்போது ஒரு நாள் என்பது 24 மண நேரமாக உள்ள நிலையில், அதுவும் நிரந்தரமானது இல்லை.. மாறப் போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது ஏதோ சயின்ஸ் பிக்ஷன் போலத் தோன்றலாம்.. ஆனால், இதுதான் உண்மை.

பூமியில் ஒரு நாள்
நமது பூமி ஒரு முறை தன்னை தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் தான் ஒரு நாள். இப்போது இப்படித் தன்னை தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. இதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறதாம். இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்பதில் இருந்து நீண்ட நேரமாக மாறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாகப் பல தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும், அதில் பல தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே உள்ளன. ஓவர்நைட்டில் இது மாற்றம் ஏற்படும் என்பது போலவும் இதனால் பலவிதச் சிக்கல்கள் உருவாகலாம் என்பது போலவும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த நேர மாற்றம் என்பது இயல்பானது என்றும் இதனால் உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பூமி சுழற்சி வேகம் குறைவது என்பது மனித உணர்வுக்கு எட்டாத மிக மெதுவான ஒரு செயல்முறையாகும்!
25 மணி நேரமாகும்
இதற்குப் பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் இது நமது தற்போதைய கடிகாரங்களையோ, நாட்காட்டிகளையோ பாதிக்காது. பூமியின் சுழற்சி குறைவதால், தற்போதைய 24 மணி நேரப் பகல் ஒருநாள் 25 மணிநேரமாக மாறும். ஆனால், இந்த மாற்றம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே நடக்கும். நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் கடல்களில் ஏற்படும் அலை உராய்வுதான் இதற்கு முக்கியக் காரணம்!இதனால் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் பூமியின் நீளம் என்பது சுமார் 1.7 மில்லி விநாடிகள் அதிகரிக்கிறது.
காரணங்கள் என்ன
அதேநேரம் வளிமண்டல நிலைமைகள், பனி உருகுதல் போன்ற காரணங்களும் கூட பூமியின் சுழற்சி வேகத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். பூமியின் மையப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், பனிப்பாறைகள், கடல் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் கூட பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
மேலும், பெரிய காற்றோட்ட அமைப்புகளும், வளிமண்டலத்திற்கும் பூமிக்கும் இடையே angular momentumஐ பரிமாறிக் கொண்டு, அதுவும் கூட சுழற்சி வேகத்தைப் பாதிக்கின்றன. இவை எல்லாம் சேர்த்தே பூமியின் சுழற்சியைப் பாதித்து, நாளை நீண்டதா மாற்றுகிறது. பல லட்சம் ஆண்டுகள் இவை தொடர்ச்சியாக நடக்கும்போது, அவை தான் நாட்களை நீட்டித்துள்ளன.
மேலும், இவை ஏதோ புதிதாக இப்போது மட்டும் நடப்பது இல்லை. பூமி உருவானது முதலே இந்தச் செயல்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. டைனோசர்கள் காலத்தில் ஒரு நாள் என்பது வெறும் 23 மணி நேரமாகவே இருந்தது. இப்போது அது 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. வரும் காலத்தில் அது மேலும் அதிகரித்து 25 மணி நேரமாக மாறும்.
மனிதர்களுக்கு பாதிப்பு?
இப்படி ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்போது நமது உடலியல் கடிகாரம் பாதிக்கப்படும்.. ஏனென்றால் இத்தனை காலம் மனிதர்களும், பெரும்பாலான உயிரினங்களும் 24 மணிநேர சர்க்காடியன் ரிதம் அடிப்படையில் இயங்குகின்றன. 25 மணி நேரமாக மாறும்போது சிக்கல்கள் ஏற்படும். உணவுப் பழக்கம், ஹார்மோன் என எல்லாமே மாறும். ஆனால், ஓவர்நைட்டில் நேரம் மாறினால் தான் இந்த சிக்கல் வரும். ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாற பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் அதற்குள் மனிதர்களின் உடல் அதற்கேற்ப மாறிவிடும் என்பதால் பெரிய சிக்கல்கள் இருக்காது.












Click it and Unblock the Notifications