லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
லண்டன்: லண்டனின் சவுத்ஹால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் மாநகர போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சர்வதேச நகரங்களில் லண்டனும் ஒன்று. இப்படி இருக்கையில் இந்நகரில் இந்தியர் கொலை செய்யப்பட்டிருப்பது, இந்தியர்களின் மொத்த பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

என்ன நடந்தது?
கடந்த ஜூன் 10ம் தேதி நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில், சவுத்ஹாலில் உள்ள நார்த் ரோடு மற்றும் டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்புக்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர், கத்திக் குத்து காயங்களுடன் இருந்த இரண்டு பேரை மீட்டனர்.
அவர்களில் குர்பேஜ் சிங் என்ற 26 வயது இந்திய வம்சாவளி இளைஞருக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியிருந்தது. உயிரை காப்பற்ற மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரான 30 வயது மதிக்கத்தக்க நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 7 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அவர்களில் 6 பேர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "குர்பேஜ் சிங்கின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அல்லது சிசிடிவி காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் அதிகளவில் வசிக்கும் சவுத்ஹால் பகுதியில் நடந்துள்ள இந்த கொலைச் சம்பவம், அங்குள்ள புலம்பெயர் மக்களிடையே பெரும் சோகத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications