இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியில் ஓமிக்ரான் பாதிப்பு- புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் தீவிரம்
லண்டன்: இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் உருமாறிய புதிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவக் கூடும் என்பதால் பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
Recommended Video
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,80,320 ஆக இருந்தது. இதில் ஜெர்மனியில் மட்டும் 72,159 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் 50,091; அமெரிக்காவில் 39,710; ரஷ்யாவில் 34,690; பிரான்ஸில் 34,690 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ரஷ்யாவில் அதிகரிக்கும் மரணங்கள்
ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,235 ஆக பதிவாகி இருந்தது. உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,13,52,465; உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,11,922; உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23,60,51,213 என அதிகரித்துள்ளது.

விமான சேவைகள் ரத்து
இதனிடையே உலக நாடுகளை உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஓமிக்ரான் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாக ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளுக்கான விமான சேவைகளை உலக நாடுகள் பல ரத்து செய்தும் கட்டுப்பாடுகளை விதித்தும் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.

ஜெர்மனி, இங்கிலாந்தில்..
இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியில் ஓமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மனியில், தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்திலும் இத்தாலியிலும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தாக்குகிறது. தற்போது ஓமிக்ரான் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பற்றி இன்னமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவரை முக கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தென்கிழக்காசியா நாடுகளுக்கும் வார்னிங்
ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், பொது இடங்களில் ஒன்று கூடுதலைத் தவிர்க்க வேண்டும். தென்கிழக்காசியாவில் கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் ஓமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றார்.












Click it and Unblock the Notifications