லண்டனை முடக்கிய 1.10 லட்சம் பேர்.. வெளிநாடு குடியேற்றத்தை தடுக்க பேரணி.. இந்தியர்களுக்கு சிக்கல்?
லண்டன்: வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்று லண்டனில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டன் வரலாற்றில் வலதுசாரி ஆதரவாளர்கள் இவ்வளவு பேர் திரண்டு பேரணி சென்றது இதுதான் முதல் முறையாகும். இதனால் இந்தியர்கள் குடியேறுவதில் சிக்கல் வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் தற்போது பிரிட்டனிலும் தொடங்கி உள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த பேரணி - போராட்டங்களால் மொத்த நகரமே குலுங்கியது.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் ‛Unite The Kingdom' என்ற பெயரில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. இவர் ஸ்டீபன் யாக்ஸ்லி என்றும் அழைக்கப்படுகிறார். தீவிர வலதுசாரி கொள்கை கொண்டவர். அதேபோல் தன்னை பத்திரிகையாளர் எனவும் அடையாளப்படுத்தி வருகிறார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதனால் Reform UK என்ற கட்சி கொஞ்சம் அவரை தள்ளியே வைத்துள்ளது.
லண்டனில் போராட்டத்தின் பின்னணி
தற்போது பிரிட்டன் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இப்படியான சூழலில் தொடர்ந்து அங்கு வெளிநாட்டினர் குடியேற்றம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு 28 ஆயிரம் வரை அங்குவெளிநாட்டினர் புகலிடம் தேடி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தான் இந்த பேரணி - போராட்டம் நடந்தது. இதில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டனர்.
போராட்டக்காரர்கள் யூனியன் கொடி, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான செயின் ஜார்ஜ் கிராஸ், அமெரிக்கா, இஸ்ரேல் கொடிகளை கைகளில் வைத்திருந்தனர். மேலும் பலரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அணியும் தொப்பி அணிந்திருந்தனர். அதில் ‛‛Make America Great Again" என்று எழுதப்பட்டு இருந்தது. அதேபோல் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் வகையில் கோஷமிட்டனர். அதேபோல் வெளிநாட்டினரை அவர்களின் வீட்டுக்கு அனுப்புங்கள் என்ற பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
முக்கிய கோரிக்கை என்ன?
இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் முக்கிய கோரிக்கையாக வெளிநாட்டினரை பிரிட்டனில் குடியேற்ற கூடாது. அதேபோல் இங்கிருக்கும் வெளிநாட்டினர் அவர்களின் நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர். மத்திய லண்டனில் இந்த பேரணி தொடங்கியது. பிரிட்டன் வரலாற்றில் வலதுசாரி ஆதரவாளர்கள் நடத்திய பெரிய போராட்டமாக இது அமைந்தது. இதனால் மத்திய லண்டன் குலுங்கியது.
போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ‛‛எங்களின் நாடு எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும். எங்களுக்கான பேச்சு சுதந்திரம் மீண்டும் கிடைக்க வேண்டும். சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க வேண்டும். நாங்கள் டாமி ராபின்சனை நம்புகிறோம்'' என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
போட்டி போராட்டம் - பரபரப்பு
அதேபோல், டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிராக டைனி அபோட் (Diane Abbott), சாரா சுல்தானா ( Zarah Sultana) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் பேரணி, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போட்டி போராட்டத்தால் லண்டனில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போட்டி போட்டு கோஷமிட்டனர். இது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் முதலில் பாதுகாப்பு பணிக்காக 1,000 போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க இந்த எண்ணிக்கை 1,600 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் ஒரு தரப்பு போராட்டக்காரர்கள் மற்றொரு தரப்பினரின் போராட்டத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இந்த நேரத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் பிரச்சனை வெடித்தது. போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீஸ் சொல்வது என்ன?
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,‛‛வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் போராட்டத்தை டாமி ராபின்சன் ‛Unite The Kingdom' என்ற பெயரில் பேரணியாக தொடங்கி உள்ளது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். அதேபோல் அவருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமாக குடியேறி உள்ளனர். தற்போதைய இந்திய போராட்டம் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் குடியேறுவதற்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications