வீட்டுக்குள்ளேயே ஸ்நாக்ஸ் திருடன்.. கணவர் மீது கோபம்.. கர்ப்பிணி எடுத்த அதிரடி முடிவு
தனது ஸ்நான்ஸ்களை திருடிச் சாப்பிட்ட கணவரால் பாதிக்கப்பட்ட பெண், ரெட்டிட் தளத்தில் வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான பதிவு கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
லண்டன்: வீட்டில் தனது தின்பண்டங்களை நிம்மதியாக வைக்க முடியவில்லை என கணவருக்குப் பயந்து பெண் ஒருவர் எடுத்த அதிரடி நடவடிக்கை சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் தின்பண்டங்களை ஒளித்து தான் வைத்திருக்க முடியும். இல்லையென்றால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு தீர்த்து விடுவார்கள் என பெற்றோர் பயப்படுவார்கள். ஆனால் சில வீடுகளில் பெரியவர்களே, 'வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்..' என தின்பண்ட விவகாரத்தில் குழந்தைகளுக்குப் போட்டியாகி விடுவார்கள்.
அப்படித்தான் தனது கணவரால் பாதிக்கப்பட்ட பெண், அதற்கு தான் கண்ட தீர்வைப் பற்றி ரெட்டிட் தளத்தில் எழுதியுள்ள பதிவு ஒன்று, சமூகவலைதளத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

10 வார கர்ப்பிணி
அந்தப் பதிவில் அவர், "10 வார கர்ப்பிணியான எனது வயது 32. என் கணவரின் வயது 36. கடந்த ஐந்து வாரங்களாக வீட்டில் நான் ஒரு பிரச்சினையை சந்தித்து வருகிறேன். வேலை நிமித்தம் வெளியில் சென்று, வீட்டுக்கு திரும்பி வரும் போதெல்லாம், எனக்குப் பிடித்தமான பீட்சா, ஊறுகாய், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள், பாப்கார்ன், சிக்கன் நூடுல்ஸ் சூப், சீஸ் போன்ற பொருட்களை வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் வைப்பேன்.

ஒன்றும் இருக்காது
ஆனால் சாப்பிடலாம் என குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், அவை இருக்காது. அனைத்தையும் மீதம் வைக்காமல் என் கணவர் தின்று தீர்த்து விடுவார். இது குறித்து அவரிடம் கேட்டால், 'இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? வேண்டுமானால் போய் மீண்டும் வாங்கி சாப்பிடு' என கூலாக கூறி விடுவார். நானும் ஒவ்வொரு முறையும் திரும்ப பணம் செலவழித்து அவற்றை வாங்கி வந்தேன்.

அதிரடி முடிவு
என் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. குட்டித் தூக்கம் போட்டு விட்டு வந்து சாப்பிடலாம் என நான் வைத்திருந்த எனக்குப் பிடித்தமான ஐஸ்கிரீமை எனது கணவர் சாப்பிட்டுத் தீர்த்து விட்டார். இதைப் பார்த்ததும் எனக்கு பைத்தியம் பிடிப்பது மாதிரி ஆகிவிட்டது. அவரைத் திட்டித் தீர்த்தும் என் கோபம் தீரவில்லை. அப்போதுதான் நான் இந்த முடிவை எடுத்தேன்.

புதிய பிரிட்ஜ்
என் தின்பண்டங்களை வைப்பதற்கென தனியாக ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்குவது என முடிவெடுத்தேன். எங்கள் இருவரது வங்கிக் கணக்குகளும் தனித்தனியாக இருந்ததால், நான் குளிர்சாதனப் பெட்டி வாங்கியதே அவருக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, அவர் அலுவலகத்தில் இருந்து திரும்பிய போது, வீட்டில் புதிய குளிர்சாதனப் பெட்டி இருப்பதையும், அது லாக் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்து அவர் அதிர்ச்சியாகி விட்டார்.

இதுதான் ஒரே வழி
எதற்கு இப்படி பிரிட்ஜுக்கு லாக் போட்டு வைத்திருக்கிறாய் என அவர் கேட்டார். அப்போது நான், 'வீட்டில் என் தின்பண்டங்கள் திருடு போகாமல் இருக்க இந்த லாக் அவசியமானது' எனத் தெரிவித்து விட்டேன். 'நான் சாப்பிடுவதை உன்னால் தடுக்க முடியாது' என அவர் கூறினார். 'ஆம், நீங்கள் சாப்பிடுவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் இனி என் தின்பண்டங்களை நீங்கள் சாப்பிடுவதை என்னால் தடுக்க முடியும்' என கூறிவிட்டேன்" என அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

சுயநலவாதி
அப்பெண்ணின் இந்தப் பதிவிற்கு சமூகவலைதளங்களில் பலர் பதில் அளித்து வருகின்றனர். அதில் பெரும்பான்மையானோர், 'நீங்கள் செய்தது தான் சரி. உங்களைக் கடையில் போய் மீண்டும் வாங்கிக் கொள்ளச் சொன்னவர், அவரே தனக்கு தேவையானதை வாங்கி இருக்கலாமே.. சரியான சுயநலவாதியாக இருக்கிறார் உங்கள் கணவர்' என அப்பெண்ணிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications