2டோஸ் வேக்சின் போட்ட பிறகும்.. சுகாதார துறை அமைச்சருக்கே கொரோனா.. வைரஸ் பாதிப்பை வேக்சின் தடுக்காதா?
லண்டன்: ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்ட பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து நாடுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன. இருந்தாலும், கொரோனாவை எந்தவொரு நாட்டினாலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் வேக்சின் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் வேக்சின் பணிகளை அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன.

பிரிட்டன்
வேக்சின் பணிகளை மிக வேகமாக மேற்கொண்டு வரும் நாடுகளில் முதன்மையானது பிரிட்டன். அங்கு மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரம் வேக்சின் பற்றாக்குறையும் அங்குப் பெரியளவில் இல்லை. இதனால் தடுப்பூசி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அமைச்சருக்கு கொரோனா
தடுப்பூசி பற்றிய அச்சம் முதலில் இருந்த போது, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைச்சர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். அப்படி அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இரண்டு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்ட பிறகும் அவருக்கு வைரஸ் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

சக அமைச்சர்கள்
இருப்பினும், அவர் எந்த விதமான கொரோனா அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை. இதையடுத்து அவர் சுயதனிமையில் உள்ளார். கடந்த வாரம் தான் சஜித் ஜாவித், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வேறு சில அமைச்சர்களுடன் ஆலோனையில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

குழப்பம்
வேக்சின் எடுத்துக் கொண்ட பிறகும் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது வேக்சின் குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வேக்சின் எடுத்துக் கொண்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றும் அப்படியே ஏற்பட்டாலும் அது தீவிரமான கொரோனா பாதிப்பாக இருக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா தடுப்பூசிகளை உயிரிழப்புகளை நிச்சயம் 100% வரை தடுப்பதாகவே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள்
பிரிட்டன் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. அதேநேரம் அங்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இளைஞர்களில் 60% பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதால், நிலைமை கையை மீறிச் செல்லாது என்பதால் தளர்வுகள் அறிவிப்பு திட்டமிட்டபடி தொடரும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications