"நீல நிற கைகள்.." 10% பேருக்கு மட்டுமே இப்படி இருக்கும்! ராணி எலிசபெத்தின் அதிர வைக்கும் கடைசி படம்
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமான நிலையில், கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமாகவே இருந்து வந்துள்ளது.
பிரிட்டன் நாட்டில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த இவரது உடல்நிலை வயது மூப்பு காரணமாக மோசமடைந்து வந்தது.
96 வயதான எலிசபெத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே, நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டு வந்தார். பொதுவெளியிலேயே வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி வந்தார்.

ராணி எலிசபெத்
இந்தச் சூழலில் தான் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் எலிசபெத் ராணியை நேரில் பார்க்க ஸ்காட்லாந்து விரைந்த நிலையில், அவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ராணி எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் புதிய அரசராகப் பொறுப்பு ஏற்கிறார். கடந்த சில மாதங்களாகவே ராணி எலிசபெத்தின் உடல்நிலை காரணமாக அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான், ராணியின் பணிகளையும் கவனித்து வந்தார்

சில மாதங்கள்
ஒருபுறம் ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கிற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் ராணி எலிசபெத் கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்விலேயே அவரது உடல்நிலை எந்தளவு மோசமாக இருந்தது என்பதைக் காண முடிந்ததாகப் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். உடல்நிலை காரணமாக ராணி எலிசபெத் பொது நிகழ்ச்சிகளில் கடந்த சில மாதங்களாகவே பெரும்பாலும் கலந்து கொள்ளவில்லை.

ஓய்வு
ராணியாகப் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடக் கடந்த ஜூலையில் நடந்த நிகழ்வில் கூட ராணி எலிசபெத் அதிகம் கலந்து கொள்ளவில்லை. முழுவதுமாக ஓய்வில் இருந்த ராணி எலிசபெத் கடந்த செப்.6இல் தான் கடைசி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதாவது புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமிக்கும் நிகழ்வு தான் அது. பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகிய நிலையில், லிஸ் டிரஸ் அடுத்த பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி நிகழ்ச்சி
அவரை அதிகாரப்பூர்வமாகப் பிரதமராக நியமிக்கும் நிகழ்வு தான் கடந்த செப். 6ஆம் தேதி நடந்தது. அது தான் ராணி எலிசபெத் கலந்து கொண்ட கடைசி நிகழ்வு ஆகும். அது தொடர்பான படங்களும் அப்போதே இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அந்தப் படத்தை இப்போது பகிரும் பலரும், அதிலேயே ராணியின் உடல்நிலை எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிடுகின்றனர்.

நீல நிறம்
அதாவது பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் வலது கை, அந்தப் படத்தில் நீல நிறத்தில் மாறி இருந்தது. காயம் ஏற்பட்டால் எப்படி ரத்தம் கட்டி தோல் நிறம் மாறுமோ அதுபோல தான் ராணியின் கை இருந்தது. இதை குறிப்பிடும் பலரும் ராணியின் உடல்நிலை கடந்த சில காலமாகவே மோசமாகவே இருந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சில படங்களில் கூட அவரது கை இதேபோல நீல நிறத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காரணம்
முதுமை காரணமாக ராணி எலிசபெத்தின் கை இப்படி மாறியதாக மூத்த மருத்துவ நிருபர் டாக்டர் ஜான் டோரஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நாம் வயதாகும்போது, நமது தோல் மற்றும் கீழ் உள்ள இணைப்பு திசுக்கள் மிகவும் உடையக்கூடியதாக மாறும், எனவே ஒரு சிறிய காயம் கூட.. அதாவது தெரியாமல் எங்காவது மோதிக் கொண்டால் கூட இப்படி நீல நிறத்தில் கைகள் மாறிவிடும்" என்றார்.

10% பேர்
உலகில் வயதானவர்களில் சுமார் 10% பேருக்கு இந்த நிலை உள்ளது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பொதுவாகச் சூரிய ஓளியில் நம் தொடர்ச்சியாக எதிர்கொள்ள நேர்ந்தால் இப்படி மாறும். ஆனால் வயதானவர்களுக்கு இப்படி கை நீல நிறத்தில் மாறும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் படத்தை இப்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து அவரது உடல்நிலை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதையே இது காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications