பிரிட்டன் தேர்தலில் களமிறங்கும் தமிழர்கள்.. "மொத்தம் 8 பேர்.." இந்த ஒருவர் வெல்வது உறுதியாம்! பரபர
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை வெள்ளை இன மக்களைத் தாண்டி பல தரப்பு மக்களும் அதிகளவில் போட்டியிடுகிறார்கள். குறிப்பாக 8 தமிழர்கள் பல்வேறு கட்சிகள் சார்பிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். யார் அவர்கள்.. எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.. அவர்கள் வெல்ல எந்தளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழர்கள்: இந்த முறை வெள்ளை இன மக்களைத் தாண்டி பல தரப்பினரும் போட்டியிடுகிறார்கள். குறிப்பாக இந்த தேர்தலில் மொத்தம் 8 தமிழர்கள் களமிறங்குகிறார்கள். அவர்கள் தேர்தலில் வெல்வார்களா இல்லையா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும். மொத்தம் 8 பேர் இப்போது ரேஸில் இருக்கும் நிலையில், அவர்கள் குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்.
உமா குமரன்: இந்த தேர்தலில் உமா குமரன் என்பர் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் வில் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கிழக்கு லண்டன் பகுதியில் தான். இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அங்கு உள்நாட்டுப் போர் நடந்த போது பிரிட்டன் நாட்டிற்கு வந்துள்ளனர். ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் வில் தொகுதியில் உமா குமரன் வெல்லவே வாய்ப்புகள் மிக அதிகம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
கவின் ஹரன்: அடுத்து கவின் ஹரன். இவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சவுத்எண்ட் ஈஸ்ட் மற்றும் ரோச்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பிரிட்டனில் தான். இவரது தந்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.. தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.. 1970களின் இறுதியில் பிரிட்டன் வந்த இவரது தந்தை நர்ஸாக பணிபுரிந்த இவரது தாயைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். நிதித் துறையில் வல்லுநராக இருக்கும் இவர் கடந்த காலங்களிலும் அரசுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இருப்பினும், இந்த முறை இவர் வெல்வது கடினம் என்றே கூறப்படுகிறது.
மயூரன் செந்தில் நாதன்: அதேபோல மயூரன் செந்தில் நாதன் என்பவர் எப்சம் மற்றும் ஈவெல் என்ற தொகுதியில் இருந்து ரிபார்ம் யுகே என்ற கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மயூரன் செந்தில் நாதனின் பெற்றோர் 1980களில் பிரிட்டன் வந்தனர். இப்போது அவர் மருத்துவராக இருக்கிறார். இந்த தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி என்பதால் மயூரன் செந்தில் நாதன் வெல்வது கடினம் என்றே கூறப்படுகிறது.
கமலா குகன்: அடுத்து கமலா குகன்.. இவர் ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் தொகுதியில் லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் தனது சிறு வயதில், அதாவது 1950களின் இறுதியில் பிரிட்டன் வந்தார். கணக்காளரான இவர், ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தொழிலாளர் கட்சியின் கையே ஓங்கி உள்ளதால் கமலா குகன் வெல்லச் சற்று வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது.
டெவினா பால்: அதேபோல டெவினா பால் என்பவர் ஹேம்பிள் பள்ளத்தாக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது தந்தை இலங்கையைச் சேர்ந்த தமிழர்.. இவரது தாய் மொரீஷியஸ் பகுதியைச் சேர்ந்த தமிழர். இவரும் 1960களில் பிரிட்டன் வந்துள்ளனர். இந்த தம்பதிக்குப் பிறந்தவர் தான் டெவினா பால்.. ஹேம்பிள் பள்ளத்தாக்கு தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நரணி ருத்ரா ராஜன்: அடுத்து நரணி ருத்ரா ராஜன்.. இவர் ஹேமர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் தொகுதியில் க்ரீன் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.. இந்தத் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கே ஆதரவு அதிகம் இருப்பதால் நரணி ருத்ரா ராஜன் வெல்வது கடினம் என்றே கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்த கிரிஷ்னி ரேஷகரோன் தொழிலாளர் கட்சி சார்பில் சட்டன் அண்ட் சீம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோலசீர்காழியில் பிறந்த ஜாஹிர் உசேன் என்பவர் பிரிட்டனில் கம்பியூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் குரோய்டன் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications