பீட்சா கடை 2வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் + இளம்பெண்.. இந்து அமைப்பினருக்கு பயந்து ‛ஜம்ப்'
லக்னோ: 2வது மாடியில் செயல்பட்ட வரும் பீட்சா கடையில் 21 வயது இளைஞர், 19 வயது பெண்ணுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு சென்ற இந்து அமைப்பினர் அவர்களிடம் யார்? என விசாரித்தனர். பயந்துபோன இளைஞர் 2வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதிக்க அவரை தொடர்ந்து அந்த இளம்பெண்ணும் கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜாஜன்பூரில் உள்ள காந்த் போலீஸ் எல்லைக்குட்பட்ட பரேலி மோர் பகுதியில் பிரபலமான பீட்சா கடை உள்ளது. இந்த கடை 2வது மாடியில் செயல்பட்டு வருகிறது.

நேற்று மாலையில் 21 வயது இளைஞர், 19 வயது பெண்ணுடன் பீட்சா கடைக்கு சென்றார். அங்கு அவர் நூடூல்ஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர். இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது பீட்சா கடைக்குள் இந்து அமைப்பினர் திடீரென்று நுழைந்தனர். அவர்கள் இந்த ஜோடி அருகே சென்று நீங்கள் யார்? பின்னணி என்ன? என்று கேட்டனர் அதற்கு இளைஞர், ‛‛நாங்கள் நூடூல்ஸ் சாப்பிட வந்தோம்'' என்று கூறினார். இதையடுத்து இருவரிடமும் என்ன ஜாதி என்று அவர்கள் கேட்டனர். அதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.
இதனால் பயந்துபோன இளைஞர் 2வது மாடியில் உள்ள பீட்சா கடையின் ஜன்னல் கம்பியை சட்டென கழற்றி அதன் வழியாக கீழே குதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண்ணும் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். கீழே விழுந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சி்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி எஸ்பி ராஜேஷ் திவேதி கூறுகையில், ‛‛போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தற்போது வரை இதுபற்றி புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications