இது வயிறா.. "காசியப்பன் பாத்திரக் கடையா.." வெலவெலத்த டாக்டர்கள்.. நம்ம நாட்டில்தான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஒன்று... இரண்டல்ல.. 63 ஸ்பூன்களை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
உத்தரபிரேதேசத்தின் முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ( வயது 32).
இளம் வயதே ஆனாலும் போதைக்கு அடிமையானதால் விஜயை அவரது குடும்பத்தினர் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்து உள்ளனர்.

மருத்துவர்கள் அதிர்ச்சி
அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்த இளைஞருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சை மையத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் வேறு பாதிப்புகள் இல்லாததால் ஸ்கேன் செய்து பார்க்க முடிவு செய்தனர். வயிற்று பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

வயிற்றில் 63 ஸ்பூன்கள்
ஏனென்றால் அவரது வயிறு முழுவதும் சில்வர் ஸ்பூன்களாக இருந்தன. அதுவும் ஒன்று இரண்டல்ல.. 63 ஸ்பூன்கள் வயிற்றில் இருந்ததாம். இதைப் பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் அவரது வயிற்றில் இருந்த 63 ஸ்பூன்களையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மருத்துவர்களே சளைக்கும் அளவுக்கு 63 ஸ்பூன்கள் வயிற்றில் இருந்தது குடும்பத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

கவலைக்கிடம்
இந்த ஸ்பூன்களை தானாக அவர் உட்கொண்டு இருக்க மாட்டார் என்றும் சிகிச்சை மையத்தில் உள்ளவர்கள் கட்டாயமாக சாப்பிட வற்புறுத்தி இருக்கலாம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இருந்தாலும், நானாகவே சாப்பிட்டதாக 32-வயதான அந்த நபர் மருத்துவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் எடுக்கப்பட்டாலும் அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே மருத்துவர்கள் கூறினர்.

போதை மயக்கத்தில் விழுங்கினாரா?
இதனால் ஐசியூவில் அனுமதித்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். அந்த இளைஞர் போதை மயக்கத்தில் இவ்வாறு ஸ்பூன்களை விழுங்கினாரா?.. அல்லது சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற போது இளைஞரை வறுபுறுத்தி சாப்பிட வைத்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications