உ.பி தேர்தல் 2017: டோட்டலாக பெயிலான ராகுலின் கூட்டணி வியூகம்! இந்த தேர்தலில் உஷாரான அகிலேஷ் யாதவ்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலையில் பலமான கூட்டணிகள் இல்லாமல் ஒவ்வொரு கட்சியும் படுஉஷாராக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சிகளான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பிரியங்கா தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சி ஆகியவை தனித்து அல்லது மிக சிறிய கட்சிகளுடன் கூட்டணி என்பதில் பிடிவாதம் காட்டுகின்றன.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 2012-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போதது அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி, 224 இடங்களை வென்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களைப் பெற்றது. 51 இடங்களை மட்டுமே பெற்று பாஜக 3-வது இடத்தில் இருந்தது. ஆனால் 5 ஆண்டுகளில் 2017-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 312 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதற்கு காரணம், 2017 சட்டசபை தேர்தலின் போது முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கடுமையான பிளவை எதிர்கொண்டிருந்தது. அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவபால் யாதவ் ஆகியோருக்கு இடையேயான மோதலில் ஆட்சி அதிகாரத்தையே சமாஜ்வாதி பறிகொடுத்தது. இன்னொரு காரணமாக, கட்சி பிளவுபடும் என்கிற களேபர சூழலில் காங்கிரஸுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்தது.

காங்.-சமாஜ்வாதி கூட்டணியால் விபரீதம்
உ.பி.யில் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு என்பது இல்லை. காங்கிரஸின் இடத்தைத்தான் தற்போதைய நிலையில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பிடித்து வைத்திருக்கின்றன. ஆனால் 2017 சட்டசபைத் தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து அதிக இடங்களை வம்படியாக வாங்கினார் ராகுல் காந்தி. செல்வாக்கே இல்லாத சூழ்நிலையிலும் 114 இடங்களை வாங்கிய காங்கிரஸ் கட்சி வென்றது என்னவோ வென்றும் 7 தொகுதிகள்தான். இத்தனைக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி வெல்லும் வாய்ப்பிருந்த தொகுதிகள் கூட காங்கிரஸுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால் மிகப் பெரும் தோல்வியை சமாஜ்வாதி கட்சி சந்திக்க நேர்ந்தது.

வைரலான கார்ட்டூன்
இந்த தேர்தல் முடிவுகளை முன்வைத்து அப்போது வெளியான கார்ட்டூன்கள், மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன. அதில் ஒன்று, அகிலேஷ் யாதவை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு செல்லும் ராகுல் காந்தி நடுவழியில் அவரையும் கீழே தள்ளி தானும் குப்புற விழுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய பாடங்களை உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ, சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் பெரிய கட்சிகளுடன் அதாவது காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை என்பதில் தெள்ள தெளிவாக இருந்தன. மேலும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலையும் எதிர்கொள்கின்றன.

பிரியங்கா தலைமையில் தனித்தே போட்டி
இதுதான் உ.பி.யில் தமக்கான செல்வாக்கை என புரிந்து கொண்டதாலோ என்னவோ, இம்முறை காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. உ.பி.யில் இம்முறை ராகுலுக்குப் பதில் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. உ.பி.யின் 403 சட்டசபை தொகுதிகளிலும் காங். நிர்வாகிகளே போட்டியிடுவார்கள்; பெண்களுக்கு 40% இடம் வழங்கப்படும் என்பது பிரியங்கா காந்தியின் வியூகம். அத்துடன் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்கிற பிரசாரத்தையும் பிரியங்கா காந்தி படுதீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

பிரியங்காவின் வியூகம்
உ.பி. தேர்தல் களத்தில் இம்முறை விவசாயிகள் பிரச்சனை மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தவே வாய்ப்பிருக்கிறது. அதுவும் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் கார் மோதி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவே அனைத்து எதிர்க்கட்சிகளும் முனைப்பு காட்டுகின்றன. ஆனால் காங்கிரஸின் பிரியங்கா காந்தியோ, மக்களுக்கு பிரச்சனை என்றால் காங்கிரஸ்தான் வருகிறது; காங்கிரஸ்தான் களத்தில் நிற்கிறது; பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் எங்கே போனது? என கேள்விகளை கேட்டு வருகிறார்.

பாஜகவுக்கு சாதகம்- கருத்து கணிப்புகள்
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இம்முறை சற்றே உஷாராக எதிர்க்கட்சிகள், பாஜகவுக்கு எதிராக தனித்தே போட்டியிடுகின்றன. அத்துடன் ஓவைசி கட்சி, சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி என ஏகப்பட்ட கட்சிகளும் களத்தில் பிரிந்து நிற்கின்றன. இது அப்பட்டமாக பாஜகவுக்கு சாதகமான ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. இருந்தபோதும் 2017 தேர்தலைப் போல 300க்கும் அதிகமான இடங்களை பாஜகவால் இம்முறை வெல்ல முடியாது என்கின்றன கருத்து கணிப்புகள். உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி நிலவினாலும் அது பேரலை அதிருப்தியாக உருவெடுக்காத வகையில் பாஜகவும் வியூகம் வகுத்து களத்தில் நிற்கிறது. இதனால் உ.பி. தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications