“பிஜேபி எம்பி”.. கோலிக்கு குவியும் ஆதரவு.. கம்பீரை காய்ச்சும் கன்னடர்கள்! அரசியலான ஐபிஎல் மோதல்
லக்னோ: நேற்றைய ஐபிஎல் போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு, லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை வைத்து கம்பீரை பாஜக எம்பி என்று சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
2023 ஐபிஎல் தொடரின் இரண்டாம் சுற்று லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியும் பாப் டூ பிளஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் டூ பிளஸ்ஸி, கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் குறைவான ரன்களையே சேர்த்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி இறங்கிய லக்னோ அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 108 ரன்களிலேயே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் சுற்று லீக் போட்டியில் பெங்களூரு அணியை லக்னோ அணி வீழ்த்தியது. அப்போது லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பெங்களூரு அணி ரசிகர்களை நோக்கி உதட்டில் கை வைத்து முறைத்தார். அப்போதே பாஜக எம்பி கர்நாடக மக்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நேற்று லக்னோ அணியின் குருனல் பாண்டியா அடித்த பந்தை கேட்ச் பிடித்த கோலி, தனது உதட்டில் விரல் வைத்து கம்பீருக்கு பதிலடி தரும் வகையில் ரியாக்சன் கொடுத்தார். இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு கோலிக்கும் கம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகும் அளவுக்கு மோதல் முற்றியது.
இரு அணி வீரர்களும், ஊழியர்களும் கோலியையும் கம்பீரையும் பிரித்து சென்று சமாதானம் செய்தனர். பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சி, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோலி, கம்பீரின் போட்டிக்கான 100 சதவீத ஊதியமும் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சனை கர்நாடக தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. டெல்லி எம்பியாக இருக்கும் கம்பீரிடம் தொகுதிக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கோலி கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பிஜேபி எம்பி என்பதும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
கர்நாடகாவில் இன்னும் 8 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில அணியான பெங்களூருவையும், கர்நாடக மக்களுக்கு பிடித்தமான விராட் கோலியையும் பாஜக எம்பி கவுதம் கம்பீர் தொடர்ந்து சீண்டி வருவதாக ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகிறார்கள். கம்பீருக்கு கர்நாடக தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள் என்பன போன்ற பதிவுகளையும் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications