பேடிஎம் மூலம் நூதனமாக டிப்ஸ்! நீதிபதி உதவியாளர் போட்ட பிளான்! சஸ்பெண்ட் செய்து ஐகோர்ட் அதிரடி
லக்னோ: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வினோதமான முறையில் டிப்ஸ் வாங்கிய நீதிபதியின் உதவியாளருக்குத் தண்டனை வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கத் தான் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், நீதிமன்றங்களில் பணிபுரிபவரே தவறு செய்தால் என்ன நடக்கும்! அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
அதாவது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உதவியாளர் வினோதமான முறையில் டிப்ஸ் வாங்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டிப்ஸ்
இந்தியாவின் வளர்ச்சியில் ஊழலும் லஞ்சமும் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட முழு பலன் கிடைப்பதில்லை. காரணம் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்களே லஞ்சம் வாங்குகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி நீதிபதியின் உதவியாளர் ஹைடெக் முறையில் டிப்ஸ் வாங்கியுள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அதாவது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி ஒருவருக்கு உதவியாளராக பணிபுரிந்தவர், வழக்கறிஞர்களிடம் ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஆஜராகும் போதும் டிப்ஸ் வாங்குவாராம். ரொக்கமாக டிப்ஸ் வாங்குவதை வைத்திருப்பது கடினம். ரிஸ்க்கும் கூட! அதிகப் பணம் கையில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் மாட்டிக் கொள்ளலாம். இதனால் என்ன செய்வதென்று யோசித்த அந்த உதவியாளர் ஹைடெக் தீர்வை கண்டுபிடித்துள்ளார். அதாவது டிஜிட்டல் முறையில் டிப்ஸ் வாங்கியுள்ளார்.

பேடிஎம் க்யூஆர் கோட்
பேடிஎம் க்யூஆர் கோடை பயன்படுத்தி, அந்த ஊழியர் டிப்ஸ் வாங்கியுள்ளார். பேடிஎம் க்யூஆர் கோடை தனது இடுப்பிலேயே செருகி வைத்திருந்த அந்த நபர் ஒவ்வொரு வழக்கறிஞரிடமும் டிப்ஸ் வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. அது கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.30) எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் நீதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஒழுங்கு நடவடிக்கை
இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அஜித் குமார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த சம்பவத்தை ரொம்பவே சீரியஸான விவகாரமாகக் கருதிய அலகாபாத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். அவர் நீதிமன்ற வளாகத்தில் ஒவ்வொரு நாளும் வந்து கையெழுத்திட வேண்டும் என்றும் இந்த நாட்களில் எவர் வேறு எந்தவொரு தொழிலையும் செய்யக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.