பசு வதைத்தால் நரகம் தான்.. அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷாமின் அகமது கருத்து! என்ன சொன்னார் தெரியுமா?
இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதால் இந்து உள்பட அனைத்து மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.
லக்னோ: பசு வதைப்பில் ஈடுபடும் நபர்கள் நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள் என உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாமின் அகமது கருத்து தெரிவித்ததோடு, பசுவை தேசிய அளவில் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என யோசனை கூறினார். அதோடு பசு வதைப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய அவர் மறுத்து மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தார்.
இந்து மதத்தில் உள்ளவர்கள் பசுக்களை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் பசுமாட்டை வதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பசுமாடுகள் கடத்தி வதைக்கப்படுவதை தடுக்கும் வகையில் பசு வதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட இந்தியாவில் அவ்வப்போது இறைச்சிக்காக பசுமாடு கடத்தல், வதைத்தல் உள்ளிட்ட செயல்கள் அரங்கேறி வருகின்றனர். இதனால் தகராறு, தாக்குதல், கொலைகள் கூட நடந்துள்ளன. இதனால் பசு தொடர்பான விஷயம் எப்போதும் சென்சிட்டவான ஒன்றாக இந்தியாவில் உள்ளது. இதனால் பசு வதைப்பில் ஈடுபடுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

வழக்கை ரத்து செய்ய மனு
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியை சேர்ந்த நபர் பசுவை கொன்று இறைச்சி விற்க முயன்றதா கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாமின் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.

மனு தள்ளுபடி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷாமின் அகமது, பசுவதை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வேளையில் நீதிபதி ஷாமின் அகமது பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். மேலும் இந்து மதம் சார்ந்த நூல்களை மேற்கொள் காட்டிய நீதிபதி ஷாமின் அகமது சில கருத்துகளை எடுத்துள்ளார்.

நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள்
அதன்படி இந்து நூல்களில் பசு வதைப்பில் ஈடுபடும் நபர்கள் நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்தியா என்பது மதசார்பற்ற நாடாக உள்ளது. இதனால் இந்து உள்பட அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். மேலும் பசுவை பாதுகாக்க தேசியஅளவில் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பசுவை இந்துக்கள் வணங்குகின்றனர். இதனால் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

புராணக்கதைகளை குறிப்பிட்டு
பசு என்பது தெய்வீகத்தையும் குறிக்கிறது. பசுவில் இருந்து பால், வெண்ணெய், தயிர், சாணம், சிறுநீர் உள்ளிட்டவை கிடைக்கிறது என கூறிய நீதிபதி அதன் முக்கியத்தை எடுத்து கூறினார். அதோடு புராணக்கதைகளை மேற்கோள் காட்டி தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடைந்தபோது பசுக்கள் வெளிப்பட்டதை குறிப்பிட்டு அதன் சிறப்பம்சத்தை எடுத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுவின் கால்கள் நான்கு வேதங்களையும், பால் நான்கு புருஷார்த்தங்களையும், கொம்புகள் தெய்வங்களையும், முகம் சூரியன் மற்றும் சந்திரனையும், தோள்கள் அக்னி கடவுளையும் குறிப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications