யோகாவை போல.. ஆயுர்வேதாவையும் சர்வதேச தளத்துக்கு கொண்டு செல்வோம்.. உபி முதல்வர் யோகி உறுதி
"நமது ஆயுர்வேதா மருத்துவ முறையையும் உலகுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அந்தக் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது"
லக்னோ: இந்தியாவின் பராம்பரியக் கலையான யோகாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியதை போல, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதாவையும் சர்வதேச தளங்களுக்கு கொண்டு செல்வோம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள செளத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் 'அகில இந்திய ஆயுர்வேத சம்மேளனம்' அமைப்பின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உலகிலேயே முதன்முதலில் நாகரீகம் அடைந்த இனம் நமது பாரத இனம்தான். மேற்கத்திய நாடுகள் எழுத்துக்கூட்டி படிக்க தொடங்கிய போது, நமது பல இந்திய மொழிகளில் பெரிய பெரிய இலக்கியங்களே உருவானது. அத்தகைய பெருமைகளைக் கொண்ட நமது இந்தியாவில் பல்வேறு பிரத்யேகமாக மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தனர். அந்த மருத்துவ முறைகளை கடைப்பிடித்ததால்தான், பல பயங்கர நோய்களில் இருந்து நமது பாரதம் மீண்டது.

குறிப்பாக, யோகா, ஆயுர்வேதா, சித்தா, யுனானி, இயற்கை வைத்தியம் என பல மருத்துவ முறைகள் இங்கு இருக்கின்றன. மிகக் கொடிய நாள்பட்ட நோய்களை கூட இந்த மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியும். இந்த மருத்துவ முறைகள் நமக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பயன்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அதன் ஒருபகுதியாகவே, யோகா கலையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார் நமது பிரதமர் நரேந்திர மோடி. அவரது முயற்சியால் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைக்கு யோகாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பலன் அடைந்து வருகின்றனர். நோயற்ற வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். அதுபோல, நமது ஆயுர்வேதா மருத்துவ முறையையும் உலகுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அந்தக் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இனி எதிர்காலத்தில் ஆயுர்வேதாவை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து உத்தரபிரதேச அரசு மேற்கொள்ளும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.












Click it and Unblock the Notifications