சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு பங்கில்லை.. தேசியக் கொடியையும் மதித்ததில்லை.. அகிலேஷ் விமர்சனம்!
லக்னோ: இந்திய தேசியக் கொடியை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் ஒருபோதும் மதித்ததில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
அம்ருத் மசோத்சவ் ஆஸாதி என்ற பெயரில் 75ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சமாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பாஜக முடிவு
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற பெயரில் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை சுதந்திர தின வாரமாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் உட்பட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இளம் தலைமுறையினர் இடையே சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதில் நம் நாட்டின் பாதுகாப்பையும், செழிப்பையும் இணைத்துக் கூறப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

அகிலேஷ் விமர்சனம்
இந்த நிலையில் தேசியக்கொடியை பாஜக , ஒருபோதும் மதித்ததில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியன்று மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். அதனை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடி
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு இல்லாதவர்கள் தேச பக்தி என்ற பெயரில் பேசுகிறார்கள். சுதந்திரத்திற்காக போராடிய இயக்கங்களுடன் தொடர்பு இல்லாதவர்கள், தியாகிகளுக்கு என்ன மரியாதை கொடுப்பார்கள். உண்மை என்னவென்றால், பாஜகவுன் சரி, அதன் தாய் கழகமான ஆர்எஸ்எஸ்ம் சரி, தேசியக் கொடியை ஒருபோதும் மதித்ததில்லை என்று விமர்சித்துள்ளார்.

அதிகாரப் பசி
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஏன் தேசியக் கொடி ஏற்றப்படாமல் உள்ளது? பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதற்கான ஆட்சியை நிறுவுவதே சுதந்திரத்தின் கனவு என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பு மீது சமாஜ்வாதி கட்சி கொண்ட அர்ப்பணிப்பு மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதிகாரப் பசிக்காக தேசியக் கொடியை பயன்படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications