உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தாலும்.. துணை முதல்வர் மற்றும் 10 அமைச்சர்கள் தோல்வி!
லக்னோ: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த துணை முதல்வர், 10 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 7 ல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 10 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக மீண்டும் வந்துள்ளது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.

11 அமைச்சர்கள் தோல்வி
இந்த தேர்தலில் பாஜக மொத்தம் 255 இடங்களில் வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தாலும் கூட முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்த துணை முதல்வர் முதல் 11 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

துணை முதல்வர் தோல்வி
உத்தர பிரதேசத்தில் துணை முதல்வராக இருந்தவர் கேசவ் பிரசாத் மவுரியா. இவர் கவ்சாம்பி மாவட்டம் சிராது சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவரை சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பல்லவி படேல் தோற்கடித்தார். அப்னாதளம்(எஸ்பி) கட்சியின் தலைவரான அனுபிரியா படேலின் மூத்த சகோதரியான பல்லவி படேலுக்கு இதுதான் முதல் தேர்தலாகும். இந்த தேர்தலில் 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

யோகியுடன் மனக்கசப்பு
தற்போது தோல்வியடைந்த பிரசாத் மவுரியா, யோகி ஆதித்யநாத் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. அதாவது 2017 சட்டசபை தேர்தலின்போது பிரசாத் மவுரியா முதல்வராக முயற்சி செய்தார். ஆனால் பாஜக மேலிடம் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இனிக்காத கரும்பு அமைச்சர்
இதேபோல், கரும்புத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ரானேவுக்கும் இந்த தேர்தல் இனிக்கவில்லை. இவர் முசாபர்நகர் தானேபவன் சட்டசபை தொகுதியில் தோல்வியடைந்தார். இவர் தனது தொகுதி கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகளில் இருந்து நிலுவை தொகை பெற்று கொடுப்பதில் தவறினார். இதனால் இவர் மீது விவசாயிகள் அதிருப்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர சுரேஷ் திரிவேதி, மோடி சிங், உபேந்திர திரிவேதி, ரன்வேந்திர பிரதாப் சிங், ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, சந்திரிக பிரசாத் உபாத்யா, சங்கீதா பல்வந்த், சத்ரபால் கங்வார், லக்கான் சிங் ராஜ்புட் ஆகியோர் சட்டசபை தொகுதியில் தோல்வியடைந்தனர்.












Click it and Unblock the Notifications