"எல்லா மதராஸாக்களையும் வெடி வைத்து தகருங்கள்.." சர்ச்சை சாமியார் யதி நரசிங்கானந்த்! பாய்ந்தது வழக்கு
லக்னோ: மதராஸா பள்ளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த சாமியார் யதி நரசிங்கானந்த் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்து மகாசபை சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யதி நரசிங்கானந்த் என்பவர் கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய யதி நரசிங்கானந்த், மதராஸா பள்ளிகள் குறித்துக் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சர்ச்சை
நேற்று ஞாயிற்றுக்கிழமை, உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் நடந்த இந்து மகாசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யதி நரசிங்கானந்த், மதராஸாக்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் மதராஸா போன்ற பள்ளிகள் இருக்கவே கூடாது என்ற ரீதியிலும் பேசினார். இது குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளதாகப் புகார்கள் கிளம்பிய நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தகர்க்க வேண்டும்
அங்கு யதி நரசிங்கானந்த் மேலும் பேசுகையில், "சீனாவைப் போல் அனைத்து மதரஸாக்களும் துப்பாக்கி குண்டுகளால் தகர்க்கப்பட வேண்டும். அனைத்து மதராஸா மாணவர்களையும் முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்.. இதனால் குரான் என்ற வைரஸ் அவர்களின் மூளையிலிருந்து அகற்றப்பட வேண்டும்" என்று யதி நரசிங்கானந்த் கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

பல்கலைக்கழகம்
அவர் இத்துடன் நின்றுவிடவில்லை. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் குறித்தும் அவர் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது மதராஸாக்களைப் போல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் தகர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் அதன் மாணவர்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று யதி நரசிங்கானந்த் மேலும் கூறினார்.

பாய்ந்தது வழக்கு
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கினர். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரம் யதி நரசிங்கானந்த் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. அவர் தொடர்ச்சியாக இப்படி சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

முதல்முறை இல்லை
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற மத மன்றம் கூட்டத்தில் வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார். அதேபோல அவர், ஒரு கோடி இந்துக்கள் கொலை செய்யப்பட மகாத்மா காந்தியே காரணம் என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி
இப்போது அலிகாரில் பேசிய யதி நரசிங்கானந்த் ராகுல் காந்தியையும் கடுமையாகத் தாக்கி பேசினார். "ராகுல் காந்தி ஜிகாதிகளுடன் கை கோர்த்து உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற முடியாமல்.. கேரளா சென்று வயநாட்டில் போட்டியிட்டு வென்றவர் அவர். ராகுல் காந்தி இந்தியாவை இணைக்க விரும்பினால், அவர் மகாத்மா காந்தியால் கட்டப்பட்ட பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும். முதலில் பாகிஸ்தான், வங்கதேசத்தை இந்தியாவுடன் இணைக்கவும். இதைச் செய்வதன் மூலம், மற்றவர்கள் அனைவரும் அவருடன் இணைவார்கள்" என்று சர்ச்சையைக் கிளப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications