யாருக்கு வேணா பொண்ணு கொடுங்க.. "இவங்களுக்கு" மட்டும் கொடுக்காதீங்க.. மத்திய அமைச்சர் பரபர பேச்சு
லக்னோ: குடிகாரர்களுக்கு உங்கள் மகளையோ, சகோதரிகளையோ திருமணம் செய்து வைக்காதீர்கள் என்று மத்திய வீட்டுவசதித் துறை இணையமைச்சர் கெளஷல் கிஷோர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மதுவுக்கு அடிமையான தனது மகனால் ஒரு இளம்பெண் விதவையாகவும், அவர்களின் மகன் தந்தை இல்லாமலும் இருக்கிறார்கள் என்றும் கெளஷல் கிஷோர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் போதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

போதைக்கு பலியான மகன்
இளைஞர்கள் பொழுபோக்காக ஆரம்பிக்கும் போதைப்பழக்கம், கடைசியில் அவர்களின் வாழக்கையையே மாற்றிவிடுகிறது. சில நேரங்களில் அவர்களின் உயிரையே குடித்துவிடுகிறது. எதற்காக இப்படிப்பட்ட கேடுகெட்ட பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த விஷயம் குறித்து பேசுவதற்கு எனக்கு முழு தகுதியும் உள்ளது. ஏனெனில், எனது மகனை நான் போதைக்கு பறிகொடுத்திருக்கிறேன்.

நான் செய்த தவறு
இந்த நேரத்தில் உங்கள் அனைவரிடமும் ஒன்றை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உங்கள் மகளையோ, சகோதரிகளையோ குடிகாரர்களுக்கு திருமணம் செய்து வைக்காதீர்கள். திருமணமானால் போதையில் இருந்து ஆண்கள் மீண்டுவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கை நம் நாட்டு மக்களிடையே உள்ளது. இதே மூடநம்பிக்கைதான் சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் இருந்தது. மதுவுக்கு அடிமையான எனது மகனை, போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தேன். பின்னர், 6 மாதங்கள் கழித்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

இளம் விதவையாக நிற்கும் மருமகள்
ஆனால், திருமணமான பிறகும் குடிப்பழக்கத்துக்கு எனது மகன் மீண்டும் அடிமையானான். கடைசியில் அந்த மதுவே அவனது உயிரை குடித்துவிட்டது. இதனால் எனது மருமகள் இளம் வயதில் விதவையாக இருக்கிறார். எனது பேரன் 2 வயதில் தந்தையை இழந்து நிற்கிறான். இதற்கெல்லாம் யார் காரணம்? இந்த மதுவும், போதையும் தான். நான் ஒரு மத்திய அமைச்சர். எனது மனைவி ஒரு எம்எல்ஏ. ஆனால் எங்களாலேயே எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை. அப்படியிருக்கும் போது, சாதாரண பொதுமக்களால் என்ன செய்ய முடியும்?

மூட்டை தூக்குபவர்களுக்கு கூட..
மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர்கள், ரிக்சா இழுப்பவர்களுக்கு கூட உங்கள் மகளை திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் கூட உங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு குடிகார அதிகாரிக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்காதீர்கள். மது ஒரு மனிதனின் ஆயுளை பாதியாக குறைத்து விடுகிறது. முதலில், போதை குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகளில் இருந்து தொடங்க வேண்டும். அங்குதான் இந்த தீயப்பழக்கம் முதன்முதலில் பிள்ளைகளுக்கு அறிமுகமாகிறது. இவ்வாறு கெளஷல் கிஷோர் கூறினார்.












Click it and Unblock the Notifications