மூட நம்பிக்கையால் கொடூரம்.. தனது குழந்தைக்காக தம்பியின் குழந்தையை நரபலி கொடுத்த அண்ணன்!
லக்னோ: தனது குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்பதற்காக தனது தம்பியின் பச்சிளம் குழந்தையை அண்ணன் நரபலி கொடுத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உல்ள மலாக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார் - ரமா தேவி தம்பதியர். இவர்களுக்கு ஒன்றரை வயது ஆன ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதியன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. பல இடங்களில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்காததால் ரமேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.

இந்த சூழலில், அந்த கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, அரைகுறையாக புதைக்கப்பட்ட ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் அந்த உடல் இருந்தது. பின்னர், அது தங்கள் குழந்தையின் உடல்தான் என ரமேஷ் குமாரும், ரமா தேவியும் உறுதி செய்தனர். இதன் தொடர்ச்சியாக, குழந்தையை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது ரமேஷ் குமாரின் அண்ணன் நரேஷின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, நரேஷுக்கும், அவரது மனைவி சரோஜ் தேவிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதுவரை சரோஜ் தேவிக்கு 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்து இறந்து போயின. இந்நிலையில், தற்போது சரோஜ் தேவி மீண்டும் கர்ப்பம் அடைந்திருக்கிறார். ஆனால் இந்தக் குழந்தையும் இறந்துவிடுமோ என்ற பயத்தில் அந்த கிராமத்தில் உள்ள சாமியாரிடம் பரிகாரம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சாமியார், குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தையை நரபலி கொடுத்தால் வயிற்றில் உள்ள சிசு நல்லபடியாக பிறக்கும் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அவர்கள், ரமேஷ் குமாரின் குழந்தையை கடத்திச் சென்று கரும்புத் தோட்டத்தில் வைத்து நரபலி கொடுத்தாக போலீஸாரிடம் நரேஷ் வாக்குமூலம் அளித்தார். இதன்பேரில் நரேஷையும், சரோஜ் தேவியையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications