சம்பளமே ரூ.15,000 தான்.. ரூ.33.88 கோடிக்கு வருமான வரி கட்ட தூய்மை பணியாளருக்கு நோட்டீஸ்.. அடடா
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஸ்டேட் வங்கியில் தூய்மை பணியாளராக பணியாற்றி மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.33.88 கோடிக்கு பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரை சேரந்தவர் கரண் குமார் வால்மிகி. இவர் தூய்மை பணியாளராக உள்ளார். கைர் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில் அவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக உள்ளது.
இந்நிலையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து கரண் குமார் வால்மிகிக்கு நோட்டீஸ் வந்தது. அந்த நோட்டீசில் வருமான வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது கரண் குமார் வால்மிகியின் வீட்டுக்கு மார்ச் 29 ம் தேதி நோட்டீஸ் வந்துள்ளது. அதில் ரூ.33.88 கோடிக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளீர்கள். இதுதொடர்பாக மார்ச் 31ம் தேதிக்குள் இணையதளம் வழியாக வருமான வரித்துறைக்கு விபரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து ஷாக்கான கரண் குமார் உடனடியாக தனக்கு தெரிந்த வங்கி ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் உடனடியாக வருமான வரித்துறையை அணுகும்படி கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வருமான வரித்துறை அலுவலகம் சென்று சம்பவம் பற்றி விளக்கினார். அதாவது, ‛‛எனக்கு ரூ.15 ஆயிரம் தான் மாத சம்பளம். நான் ரூ.33 கோடிக்கும் அதிகமாக பணப்பரிமாற்றம் எதையும் செய்யவில்லை'' என்று கூறினார். அதை கேட்ட அதிகாரிகள் அவரது ஆவணங்களை பயன்படுத்தி வேறு யாராவது இந்த பணப்பரிமாற்றத்தை செய்திருக்கலாம் என்றனர்.
மேலும் அதிகாரிகள் போலீசில் புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணைையை தொடங்கி உள்ளனர். வருமான வரித்துறை சார்பில் இப்படியான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. முன்னதாக கடந்த மாத இறுதியில் உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே வசிக்கும் ஜூஸ் வியாபாரி முகமது ரஹீசுக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.7 கோடியே 79 லட்சத்தை ஜிஎஸ்டியாக கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். இவர் தள்ளுவண்டியில் வைத்து முட்டை விற்பனை செய்து வருகிறார். இவர் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு மொத்தம் ரூ.49.24 கோடிக்கு பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி ரூ.6 கோடி சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications