பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் இந்தியா.. உத்தரப்பிரதேசத்தில் போர் விமானங்களை தரையிறக்கிய விமானப் படை
லக்னோ: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், கங்கா விரைவுச் சாலையில் முதல்முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என்பதால் பாகிஸ்தான் அரசு கடும் அச்சத்தில் உள்ளது. இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலில் இருந்து நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், கங்கா விரைவுச் சாலையில் முதல்முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை மேற்கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், ஷாஜகான்பீரில் உள்ள கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஓடுதளத்தில் ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் விமானப் படையினர் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஓடுதளத்தில் போா் மற்றும் அவசர காலங்களில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் போா் விமானங்கள் தரையிறங்க முடியும். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அவசர காலங்களை எதிர்கொள்ளும் வகையிலான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ், சுல்தான்பூா், இடாவா ஆகிய மூன்று விரைவுச் சாலைகளில் மட்டுமே போா் விமானங்களைத் தரையிறக்கும் வகையில் அவசரகால ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று ஓடுதளங்களிலும் பகல் நேரத்தில் மட்டுமே போா் விமானங்களைத் தரையிறக்க முடியும். ஆனால், கங்கா விரைவுச் சாலையில் இரவிலும் போர் விமானங்களை தரையிறக்கும் வசதி உள்ளது. பகல் மற்றும் இரவிலும் போர் விமானங்கள் தரையிறங்கக் கூடிய 3.5 கிலோ மீட்டர் ஓடுபாதை கொண்ட சிறப்பான விரைவுச் சாலையாகும்.
இதன் கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, போா் விமானங்களைத் தரையிறக்கும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரபேல், சுகோய், மிராஜ்-2000, மிக்-29 ஆகிய போர் விமானங்கள், சி-130ஜே சூப்பா் ஹெல்குலிஸ், ஏஎன்-32 ஆகிய சரக்குப் போக்குவரத்து விமானங்கள், எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா் ஆகிய விமானங்கள் ஒத்திகை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications