அமைதியாக நடந்து சென்ற விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசிய கார் - பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உத்தரபிரதேச மாநில அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
லக்னௌ: லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பின்னால் வேகமாக வரும் வாகனம் ஒன்று மோதி தூக்கி வீசி விட்டு நிற்காமல் செல்கிறது. அந்த வாகனத்தின் பின்னால் வந்த கார்களும் வேகமாக கடந்து செல்கின்றன. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவின் தெளிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.

லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த வன்முறை சம்பவத்தின் போது எனது மகன் அங்கு இல்லை. எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்றதாக கூறப்படும் நான்கு விவசாயிகளின் உடல்களை தகனம் செய்ய விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர், கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்த விவசாயிகள் குகுடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் மோதிய காட்சிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பாஜகவினர் மீது குற்றம் சாட்டியது. ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.
இதனிடையே லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. விவசாயிகள் அமைதியாக நடந்து செல்லும் போது பின்னால் வேகமாக வந்த எஸ்யுவி வாகனம் மோதி விட்டு நிற்காமல் செல்கிறது. அப்போது விவசாயிகள் கூக்குரல் எழுப்புகின்றனர். அந்த வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனமும் நிற்காமல் செல்கிறது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்தே வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வன்முறை மூண்டது. இந்த தெளிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications