கையில் 52 ஆயிரம்..கார் வீடு இல்லை! மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா? என்ன படிச்சிருக்கார் தெரியுமா?
லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தாக்கல் செய்த தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பு மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார். தற்போது அந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
வாரணாசியில் மோடி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இறுதி கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி களம் காண்கிறார். குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதால் தேசிய அளவில் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்: இந்த நிலையில் நேற்று வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு உடன் சென்றிருந்தனர்.
சொத்து மதிப்பு: வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி அங்கிருந்து வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு மற்றும் கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.
வீடு கார் இல்லை: பிரதமர் மோடியின் பெயரில் நிலமோ, வீடு, காரோ எதுவுமே இல்லை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 52,920 ரூபாய் ரொக்கமாக அவரிடம் உள்ளதாகவும் நிரந்தர வைப்புத் தொகையாக ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா வங்கியில் 2.8 கோடி ரூபாயும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கி கணக்குகளில் 80,340 ரூபாய் உள்ளதாகவும். தேசிய சேமிப்பு சான்றிதழில் ஒன்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வருமானம் அதிகரிப்பு: மேலும் 2.6 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் 2018-19ஆம் ஆண்டில் 11.14 லட்சம் ரூபாயாக இருந்த அவரது வருமானம் 2023ஆம் நிதியாண்டில் 23.56 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
கல்வி தகுதி: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவலில் 1967-ல் எஸ்எஸ்சி படிப்பையும் 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் இளங்கலை பட்டமும் 1983இல் அஹமதாபாத் குஜராத் யூனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 தேர்தல்: 2019 லோக்சபா தேர்தலில், குஜராத்தின் காந்திநகரில் ஒரு குடியிருப்பு, ரூ.1.27 கோடி நிரந்தர வைப்புத்தொகை மற்றும் கையில் ரூ.38,750 ரொக்கம் உட்பட ரூ.2.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மோடி அறிவித்த நிலையில், தற்போது அந்த வீடு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications