கோடைக்காலத்தில் 'பவர் கட்' என்ற சொல்லே கேட்கக்கூடாது.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
இந்தக் கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தில் மின்தடை ஏற்பட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் வரும் கோடைக்காலம் முழுவதும் ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படக்கூடாது"
லக்னோ: எதிர்வரும் கோடைக்காலம் முடியும் வரை உத்தரபிரதேசம் முழுவதும் மின் தடை ஏற்படவே கூடாது என்று மின்வாரிய ஊழியர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு அதிரடி திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுத்துறைகள் அனைத்தும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது தொடர்பாக பல அதிரடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பும் வெளியிட்டார். அதாவது, நாட்டிலேயே உத்தரபிரதேசத்தை முதன்மையான மாநிலமாக மாற்ற தான் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அதற்கேற்ப அரசுத்துறைகள் அனைத்தும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

அந்த வகையில், தற்போது உத்தரபிரதேசத்தில் மக்கள் சார்ந்த வளர்ச்சிப் பணிகளும், உள்கட்டமைப்புப் பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சாலைகளை மேம்படுத்துதல், புதிய நெடுஞ்சாலைகளை அமைத்தல், எக்ஸ்பிரஸ் வே சாலைகளை அமைத்தல், பல அடுக்கு மேம்பாலங்கள் கட்டமைத்தல் என உத்தரபிரதேசத்தில் இரவு பகலாக வேலைகள் நடந்து வருகின்றன. மேலும், உ.பி. இளைஞர்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு சர்வதேச தரத்திலான தொழிற்பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மின்வாரிய உயரதிகாரிகளிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று காணொலிக் காட்சி மூலமாக அவரச ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், "எதிர்வரும் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். மேலும், முன்னெப்போதும் இருந்திராத வகையில் இந்தக் கோடைக்காலம் அதிக வெப்பத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தில் மின்தடை ஏற்பட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளவார்கள். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் வரும் கோடைக்காலம் முழுவதும் ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படக்கூடாது" என உத்தரவிட்டார்.

முதல்வரின் இந்த உத்தரவை அடுத்து, உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து டிரான்ஸ்ஃபார்களும், அதிக மின் சுமையை தாங்கும் வகையில் மாற்றப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் ஏற்கனவே 2 லட்சத்து 51 ஆயிரத்து 50 டிரான்ஸ்பார்மர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. குறிப்பாக, மின்திருட்டை தடுக்கும் வகையில் 17,782 கிமீ-க்கு ஏபி கேபிள்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மின்வயர்கள், மின் கம்பங்களை மேம்படுத்தும் பணியிலும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது உத்தரபிரதேசத்தில் அதிக தொழிற்சாலைகள் இயங்கி வருவதாலும், பாதுகாப்பு வழித்தடத்தை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாலும் இந்த உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications