'அவரிடம் வரலாற்றை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள்..' ஜின்னா சர்ச்சை.. அகிலேஷை சாடிய ஓவைசி
லக்னோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முகமது அலி ஜின்னாவை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களில் ஒருவர் என கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் வரலாற்றைச் சற்று முறையாகப் படிக்க வேண்டும் என மஜ்லிஸ் கட்சித் தலைவரை ஓவைசி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.
கடந்த ஆண்டு வரை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பெரியளவில் அதிருப்தி எதுவும் இல்லாமலேயே இருந்தது.

உபி தேர்தல்
இருப்பினும், இந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலை நிலைமை அப்படியே புரட்டிப்போட்டது. கொரோனா பாதிப்பு உபி-இல் கையை மீறிச் சென்றது. கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்களைக் கங்கை ஆற்றில் வீசிய அவலங்களும் அரங்கேறின. இதனால் உபி பாஜக அரசு மீது. குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு உபி-இல் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தலைமை அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

அகிலேஷ் யாதவ்
அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் என மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகிய தலைவர்களின் வரிசையில் ஜின்னாவையும் குறிப்பிட்டார். பொதுக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ், "சர்தார் படேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து தலைவர்களாகினர். அவர்கள் இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய தலைவர்கள்" என்று பேசினார்.

சாடல்
அகிலேஷ் யாதவ்வின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக பாஜக தலைவர்கள் அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவரும் வகையிலேயே அகிலேஷ் இப்படிப் பேசியுள்ளதாக விமர்சித்துள்ளனர். உபி முதல்வர் யோகி அதித்யநாத் அகிலேஷ் யாதவ்வுக்கு தாலிபான்களின் மனநிலை இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அகிலேஷ் யாதவ் உடனடியாக மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஓவைசி தாக்கு
இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், மஜ்லிஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன ஓவைசியும் இது தொடர்பாக அகிலேஷ் யாதவை கடுமையாகச் சாடியுள்ளார். முகமது அலி ஜின்னாவுடன் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அவர் அகிலேஷ் யாதவ் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

படிக்க சொல்லுங்கள்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "அகிலேஷ் யாதவ் இப்படிப் பேசுவதன் மூலம் சமுதாயத்தில் ஒரு பிரிவினரை மகிழ்விக்கலாம் என அவர் நினைக்கிறார் போல. அவர் இப்படிப் பேசக்கூடாது. அவரிடம் நாட்டின் வரலாற்றை யாராவது படிக்கச் சொல்லுங்கள். முகமது அலி ஜின்னாவுடன் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அகிலேஷ் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் இந்த இரு தேசக் கோட்பாட்டை நிராகரித்தனர். அவர்கள் இந்தியாவையே தங்கள் நாடாகத் தேர்ந்தெடுத்தனர்" என்று மிகக் கடுமையாக அகிலேஷ் யாதவை சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications