பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா.. முதல் தவணை பணத்தோடு விபூதி அடித்த மனைவிகள்.. 4 கணவர்கள் கதறல்
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் முதல் தவணை பணத்துடன் மனைவிகள் எஸ்கேப் ஆன நிலையில் 4 கணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் தவணை பணம் வங்கிக்கணக்குக்கு வந்திருக்கிறது. ஆனால் பணம் வங்கி கணக்கிற்கு வந்த பின்னர், ஒரு கிராமத்திலிருந்த நான்கு பெண்கள் அதை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த திட்டமாகும். ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது,
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகள் கட்ட நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும் என்றுவிதிமுறை உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.170000 ஆகும். இதில் மத்திய அரசு நிதி (ரூ.72,000) + மாநில அரசு நிதி (ரூ.48,000) + மேற்கூரை அமைக்க மாநில கூடுதல் நிதி (ரூ.50,000). மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12,000/- மதிப்பிலான கழிப்பறை கட்டிதரப்படுகிறது.

யாருக்கு முன்னுரிமை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழான மனிதசக்தி நாட்களை கொண்டு 90 நாட்களுக்கு வீடு கட்டப்படுகிறது. (90 X ரூ.205 = ரூ.18450)
சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். வீடு இல்லாத பயனாளிகள்.
ஆதரவற்ற கைவிடப்பட்டவர்கள் மற்றும் பிச்சை பெறுபவர்கள், மனித கழிவுகளை அப்புறப்படுத்துபவர்கள், புராதான மலைவாழ் மக்கள், சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மனைவிகள் விண்ணப்பம்
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் படிப்படியாக நிதி வழங்கப்படுவது வழக்கம். உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் பாரபங்கி மாவட்டத்தில் வீடு கட்ட முதல் தவணையாக தலா ரூ.50,000 பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது சிலர் தங்களின் மனைவி பெயரில் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

எத்தனை பேர்
ஆனால் விண்ணப்பித்து பணம் கிடைத்த பிறகும், வீடு கட்டாமல் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது, இதையறிந்த மாவட்ட நிர்வாகம் ஏன் என்று கேட்டிருக்கிறது. இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவம் விஷ்வகர்மா கூறும் போது, "பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட முதல் கட்டமாக 16,000 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. அதில் 40 பேர் வீடு கட்ட ஆரம்பிக்கவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம்" என்றார்.

பணத்துடன் எஸ்கேப்
இந்நிலையில் பல்ஹாரா என்ற கிராமத்தில் வசிக்கும் நான்கு பேர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து வீடு கட்ட பணம் வங்கிக்கணக்குக்கு வந்தவுடன் அதை எடுத்துக்கொண்டு தங்களின் மனைவிகள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக கதறியபடி கூறியிருக்கிறார்கள். மேலும், அந்தப் பெண்கள் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கணவன்கள் கதறல்
எஸ்கேப் ஆன மனைவிகளின் கணவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம், அடுத்த தவணைத் தொகையை வங்கிக்கு அனுப்பவேண்டாம் என்றும் அப்படி அனுப்பினால் அதையும் எடுத்துக்கொள்வார்கள் என்று எழுத்துபூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்களிடமிருந்து எப்படிப் பணத்தை மீட்பது என்று தெரியாமல் ஆடிப்போன பெண்களின் கணவர்கள் நான்கு பேரும் போலீஸிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த தவணை
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் நான்கு பேருக்கும் அடுத்த தவணை பணம் கிடைக்காதபடி செய்துள்ளது, அதோடு மாவட்ட வளர்ச்சித்துறை அதிகாரி இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் முதல் தவணை பணத்துடன் மனைவிகள் எஸ்கேப் ஆன சம்பவம் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் பல்ஹாரா கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications