இதே வேலையா போச்சு.. சம்பல் மசூதி சர்ச்சை! உச்சநீதிமன்றம் தலையிட பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
லக்னோ: உத்தரப் பிரசேத்தின் சம்பல் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டபோது வன்முறை வெடித்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று வயநாடு எம்பியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வலியுறித்தியுள்ளார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இஸ்லாமிய கட்டிடங்களின் கீழ் தங்களின் மத வழிப்பாட்டு தலம் இருப்பதாக இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். பாபர் மசூதி தொடங்கி, தற்போது இது சம்பல் மசூதி வரை நீண்டிருக்கிறது. மேற்கு உ.பியின் சம்பல் மாவட்டத்தில் ஷாஜி ஜமா பகுதியில்தான் இந்த மசூதி அமைந்திருக்கிறது. இது கட்டப்பட்ட காலம் எது என்பது இன்னும் உறுதியாக தெரியாமல் இருக்கிறது.

இப்படி இருக்கையில், இங்குள்ள கைலா தேவி கோயிலின் தலைமை அர்ச்சகரான ரிஷிராஜ் கிரி, மசூதியின் அடியில் இந்து வழிப்பாட்டு தலம் இருப்பதாகவும். அதை இடித்துவிட்டுதான் மசூதியே கட்டப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆய்வு ஏற்கெனவே ஒரு கட்டம் நடந்திருக்கிறது. ஆயினும் அதில் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூறி நேற்று காலை மீண்டும் ஆய்வு தொடங்கப்பட்டிருக்கிறது.
ஆய்வை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது உள்ளூர் கலவர கும்பல் கற்கறை வீசியும், துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் உயர் அதிகாரிகள் சிலர் காயமடைந்ததாகவும், எனவே எதிர் தாக்குதல் நடத்தவே, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்.
இந்த வன்முறையில் 3 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி தோட்டா தாக்கியதில் மரணமடைந்துள்ளனர் என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வீச்சில் ஈடுபட்டதாக பெண்கள், சிறார்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த வன்முறை சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அரசு மக்களை தூண்டி விடுகிறது. நிலைமையை புரிந்துக்கொள்வதில் அதிகாரிகள் தொல்வியடைந்திருக்கிறார்கள், அவர்களுடைய நடவடிக்கை இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கியுள்ளது. என்ன நடந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
வன்முறை குறித்து இஸ்லாமியர்கள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இந்த மசூதியின் கிணறு அமைந்துள்ள பகுதியில் இந்துத்துவா அமைப்பினர் பூஜை செய்ய முயன்று வருகின்றனர். இது திட்டமிடப்பட்ட சதி செயல். வன்முறையை அவர்கள்தான் தூண்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
எப்படி இருப்பினும் இரு மதத்தினரும் பரஸ்பரம் அன்பு மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது.












Click it and Unblock the Notifications