"அரசு பள்ளியா? இல்லை டாஸ்மாக் குடோனா?".. பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்.. உ.பியில் அவலம்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளியில் பெட்டி பெட்டியாக மதுபான பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசிரியரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரில் ஒடிசா மாநில எல்லைப்பகுதியில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.
பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது விளையாட்டு பீரியடின் போது மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்தில் உள்ள பொருட்கள் வைத்திருக்கும் அறையை திறந்து பார்த்தனர்.

பள்ளியில் மதுபான பாட்டில்கள்
அப்போது அந்த அறையில் பெட்டி பெட்டிகளாக மதுபானங்கள் அடுக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தினர். அதன்பேரில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் அந்த அறையில் வந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் ஒன்றல்ல இரண்டல்ல.. மொத்தம் 52 மதுபான பாக்ஸ்கள் இருந்தன.

போலீஸ் விசாரணை
இதையடுத்து இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த பள்ளிக்கூடத்துக்கு வந்த போலீசார் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் இங்கு எப்படி மதுபானங்கள் வைக்கப்பட்டது, எப்போது வைக்கப்பட்டது என்பது குறித்தும் பள்ளி ஆசிரியர்கள் யாரும் இத்தனை நாட்களாக இதை பார்க்கவில்லையா என்றும் விசாரணை நடத்தினர்.

கட்டுமான பணிகள் நடந்தது
பள்ளிக்கூடம் பீகார் மாநில எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் சமூக விரோதிகள் சிலர் பள்ளிக்கூடத்தில் பதுக்கி வைத்து நேரம் கிடைக்கும் சமயத்தில் அங்கிருந்து பீகாருக்கு கடத்த திட்டமிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இத்தகைய சம்பவம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ''பள்ளியில் சமீபத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இதனால் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ள அந்த அறையில் தான் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் சாவியும் இந்த கிராமப்புற தலைவரிடம் தான் இருக்கிறது' என்றார்.

தலைமையாசிரியர் இடைநீக்கம்
அரசு பள்ளியில் மதுபான பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரித்தேஷ் குமார் சிங் தெரிவிக்கையில், 'அரசுப் பள்ளியில் இருந்து 51 மதுபான பாக்ஸ்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலால் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசியரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீவிர நடவடிக்கை
இதேபோல் பள்ளிக்கூடத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்தது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்கத்து மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்து மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டு பீகாருக்கு அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. ஒருசிலர் ஆம்புலன்ஸ்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து உத்தர பிரதேசத்தில் இருந்து பீகாருக்கு கடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications