பெட்ரோல் பங்கில் ரூ.2000 தாளை நீட்டியது குற்றமா.. வாயிலயே.. ஊழியர்கள் செஞ்ச வேலையால் ஷாக்
லக்னோ: சமீபத்தில் 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டு மாறாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்நோட்டுகளை மாற்ற மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் பங்கில் இந்த நோட்டை நீட்டியவருக்கு பங்க் நிர்வாகம் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார். மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசைகள் மக்கள் காத்திருந்தனர்.

மறுபுறம், பெரும் பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏஜென்ட்டுகளை பயன்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்தனர். இவையனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் செய்த தியாகம் என்று சொல்லப்பட்டது. இப்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட இந்திய கிராமங்களில் ஒரு நாள் வருவாய் 100 ரூபாய் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது 2,000 ரூபாய் நோட்டுக்கான தேவை எதுவும் பெரியதாக எழவில்லை. எனவே இதன் பயன்பாடு வெகுவாக குறைந்தது.
ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இன்று (மே 23) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகள், நகைக்கடைகள் போன்றவற்றில் கூட 2,000 நோட்டுக்கள் மாறாது என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் 2,000 மாற்ற முடியுமா? என்று எழுந்த கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சகம், "மாற்றிக்கொள்ளலாம்" என்று விளக்கமளித்துள்ளது. ஆனால் யதார்த்தத்தில் இது சாத்தியமில்லாததாக இருப்பதாக பலர் புலம்புகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் அடித்துவிட்டு 2,000 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளார்.

ஆனால் ஊழியர்கள் சில்லறை இல்லை எனக்கூறி மீண்டும் வண்டியிலிருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷயில் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் உ.பியின் ஜலான் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ பரவலாக பேசப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாவட்ட தலைமை காவல் அதிகாரி டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications