"இன்றைய பிரதமர் உலக பிரபலம்.. ஆனால், அவர் இருந்தாரு பாருங்க.." நேருவை விடாமல் சாடிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பிரதமர்களை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இந்தச் சூழலில் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டுப் பேசினார். நேருவை மறைமுகமாகச் சாடிய யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி நாட்டின் பாரம்பரியத்தை நினைத்துப் பெருமைப்படுபவர் என்று குறிப்பிட்டார். இப்படி பாரம்பரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுவது மட்டுமின்றி நாட்டை வளமான தேசமாக மாற்றுவதிலும் அவர் உறுதியாக உள்ளார். மோடி@20 என்ற புத்தக வெளியீட்டு விழாவில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசினார்.

நேரு மீது சாடல்
அவர் மேலும் கூறுகையில், "நமக்கு முன்பு ஒருவர் பிரதமராக இருந்தார். அவர் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ளாத ஒருவர், ஆனால், நமக்கு இப்போது கிடைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் வளர்ச்சி அடைந்த ஒரு நாடாக மாற்றத் தொடர்ந்து உழைத்து வருகிறார். பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் உலகிற்கே பிரதமர் மோடி தான் எடுத்துக்காட்டாக உள்ளார்.

ராமர் கோயில்
காஷ்மீரில் பயங்கரவாதத்தின் வேரை நிரந்தரமாக ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும் அவர் எந்த தயக்கமும் காட்டவில்லை. இதுவே பிரதமர் மோடியின் தலைமைப் பண்பிற்கு ஒரு சான்று. சோம்நாத் கோவிலைப் புனரமைக்கும் பணிகளுக்கே குடியரசைத் தலைவரை அனுப்பாத ஒரு பிரதமரைப் பார்த்தோம். ஆனால் இன்று அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணியை அவரே நேரடியாகத் தொடங்கி வைத்த பிரதமரை நாம் கொண்டு இருக்கிறோம்.

5ஆவது பெரிய பொருளாதாரம்
இப்போது உலகிலேயே ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து உள்ளது. இதுவே பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமைக்கு ஒரு மாபெரும் சான்று. அதிலும் குறிப்பாக சுமார் இருநூறு ஆண்டுகள் நமது நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி, நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி உள்ளோம். இதை யாரும் மறந்துவிடக் கூடாது.

பிரபல தலைவர்
இன்று உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். கடந்த 20 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பிரதமர் மோடி செய்த நிர்வாகப் பணியை அடிப்படையாகக் கொண்டது தான் இந்தப் புத்தகம்" என்று அவர் குறிப்பிட்டார்.

செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல்
சமீபத்தில் மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 75 சதவீத மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். பிரதமர் மோடி இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். 2021 நவம்பர் மற்றும் 2022 ஜனவரி காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications